முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ரூ.255 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 3 – முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளின் உபயோகத்திற்காக 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரத்தில் விநியோகிக்க குடிநீர் வாரியம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இந்த திட்டத்தின் மதிப்பு 255 கோடி ரூபாய் ஆகும். 2 வருட காலத்தில் இந்த பணி முடிவடையும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வீட்டு உபயோகத்திற்கு வழங்க இயலும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

சென்னை மாநகரம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நல்ல போக்குவரத்து தொடர்பு உள்ளதால், தொழிற்சாலைகளின் முக்கியத்தும் வாய்ந்த நகரமாக விளங்குகிறது. தரை வழி, கடல் வழி, ரெயில் வழி ஆகிய தடங்கள், வடசென்னையில் உள்ளதால், வடசென்னை தொழிற்சாலை நகரமாக உருவாக உள்ளது.

மணலி – எண்ணூர், மணலி – மீஞ்சூர் வழித்தடங்களில் அதிக தண்ணீர் சார்புள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலைகள், இயற்கை எரிவாயு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. தமிழ்நாடு தொழிற் மேம்பாட்டுக்கழகம் இந்தோராமா சிந்தசிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புது எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்க உள்ளது.

தற்போது மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அறிவித்தபடி தொழிற்சாலைகள் தொடங்க உள்ள தடையை நீக்கி உள்ளதால், அதிகமான தொழிற்சாலைகள் மற்றும் தற்போதுள்ள தொழிற்சாலைகளின் விரிவாக்கங்கள் நடைபெற உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இந்த துறைமுகத்தில் இயற்கை எரி வாயு முனையம் அமைக்க இருப்பதால் இங்கே தொழிற்சாலைகள் அதிகம் வர வாய்ப்பும் உள்ளது.

எல்.என்.டி நிறுவனம் தமிழ்நாடு தொழிற் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து காட்டுப்பள்ளியில் மிக பெரிய கப்பல்தளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது துவங்கப்பட்டால் கொழும்பு, சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய வெளிநாட்டு வழிதடமாக காட்டுப்பள்ளி துறைமுகம் விளங்கும்.

அபேன் நிறுவனம் காட்டுப்பள்ளி அருகே 1200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு 660 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு 660 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம், வல்லூரில் மூன்று 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. மேற்கூறிய காரணங்களால் வடசென்னையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு குடிநீர் மற்றும் பிற உபயோகத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிக்கப்படவுள்ளது.

68 தொழிற்சாலைகள்

வடசென்னையில் தற்போதுள்ள தொழிற்சாலைகள் வருமாறு:–

1. முறைபடுத்தும் தொழிற்சாலைகள்–15

2. மின் உற்பத்தி நிலையங்கள்–6

3. கப்பல் கட்டுதல் தொழில் நிறுவனங்கள்–4

4. பிற பயன்பாடுகளுக்கு உள்ள தொழிற்சாலைகள்– 43

மொத்தம்– 68 தொழிற்சாலைகள் உள்ளன.

68 தொழிற்சாலைகள் தவிர தொழில் தொடங்க உள்ள தடையை நீக்கியதால் மேலும் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலைகளுக்கான தனியாக நீர் ஆதாரங்கள் ஏதுமில்லை. சென்னைக் குடிநீர் வாரியம் தற்பொழுது மழைநீர் மற்றும் நிலத்தடிநீரை சுத்தம் செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறது.

தற்போதுள்ள மற்றும் புதியதாக தொடங்க உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரமுள்ள நீரை வழங்க திட்டமிட்டுள்ளது.

இட்காட் நிறுவனம் வடசென்னையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் அளவினை ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.

எனவே வடசென்னையை ஒட்டியுள்ள மணலி மற்றும் மீஞ்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 2030-ம் ஆண்டிற்கான தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் என கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் உபயோகித்தபின், வெளியேற்றப்படும் நீரை மீண்டும் சுத்திகரிப்பட்டு உபயோகிக்க திட்டமிடப்பட்டது. சிங்கப்பூர் பொது பயன்பாட்டு நிறுவனம் கழிவுநீரை சுத்திகரித்து ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் கொள் படுகைகளுக்கு அனுப்பியது. நியூ வாட்டர் என்பது உபயோகப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட நீரை, சவ்வூடுபரவுதல் மூலம் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு கிருமிகள் நீக்குவதற்கு குளோரின் மூலம் சுத்திகரித்து வழங்கப்படும் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீராகும்.

நியூ வாட்டர் முதன்மையாக தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் மின்னணு தொழிற்சாலைகள், மின்உற்பத்தி நிலையங்கள், வணிக நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், குளிர்சாதன பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா கழிவுநீரை மறு சுழற்சி செய்து பிற உபயோகத்திற்காக பயன்படுத்துவதில் தீவிர முயற்சி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் 2014-–15 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் விதி எண் 110 ன் கீழ் வடசென்னையிலுள்ள தொழிற்சாலைகளின் உபயோகத்திற்காக மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் உலக வங்கி நிதியுதவியுடன் கொடுங்கையூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார்.

கொடுங்கையூரில் தற்போது நாளொன்றுக்கு 80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டும், 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளன. புதிதாக நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை எதிற்மறை சவ்வூடுபரவுதல் முறையில் சுத்திகரிப்பு நிலையம் முதலமைச்சரின் அறிவிப்பின்படி, கொடுங்கையூரில் சென்னைக் குடிநீர் வாரிய இடத்திலேயே அமைக்கப்படவுள்ளது.

தற்போது ஏற்கனவே கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 36 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2-ம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மணலி, மீஞ்சூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்குவதன் மூலம் வருடந்தோறும் ரூபாய் 15 கோடி வருமானம் சென்னைக் குடிநீர் வாரியத்தால் ஈட்டப்பட்டுவருகிறது.

தற்போது முதல்வரால் அறிவிக்கப்பட்ட 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 34 தொழிற் நிறுவனங்களுக்கு குடிநீர் தரத்திலான தண்ணீர் வழங்குவதால் ஆண்டிற்கு சுமார் 74 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளது.

முன் சுத்திகரிப்பு முறை என்பது மறு சுழற்சி சுத்திகரிப்பு முறையின் முதல் நிலை ஆகும் . இந்த முறையில் மிதக்கும் கசடுகள், அசுத்தங்கள் மற்றும் எதிர்மறை சவூட்டுக்கு தீமை விளைவிக்கும் பொருட்கள் அகற்றப்படும் அல்லது குறைக்கப்படும். முன் சுத்திகரிப்பு முறையின் கட்டங்கள் பின் வருமாறு,

* குளோரின் டைஆக்ஸைடு செலுத்துவதன் மூலம் உயிரிகளுக்கு ஆக்சிஜன் ஊட்டல்

* விரைவு மணல் படுகை வடிகட்டியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் நுண்ணிய வடிகட்டி படுகைக்கு அனுப்பப்படும்.

நுண்ணிய வடிகட்டியின் மூலம் வடிகட்டுதல் முறையின் மூலம் முன் சுத்திரிப்பு முறையின் போது வடிகட்டபடாத மிக நுண்ணிய அசுத்தங்கள் அகற்றப்படும். இதன் மூலம் அடுத்த கட்டத்திலுள்ள எதிர்மறை சவ்வூடு பரவல் சவ்வூடுகள் பாதுகாக்கப்படும்,

எதிர்மறை சவ்வூடு பரவல் முறை அணுத்துகள்கள் அகற்றும் பணி நடைபெறும். இம்முறையில் ஒரு பாதையில் தூய நீரும் எதிர் பாதையில் அதிக உப்பு தன்மையுள்ளநீரும் வெளிப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் நீர் கரியமில வாயு நீக்கி அமைப்பு வழியாக செலுத்தப்பட்டு நீரின் கார அமில தன்மைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட நீரானது கீழ்நிலை தொட்டிகளில் சேமிக்கப்பட்டு மின்சார பம்புகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

துரித மணல் வடிகட்டி , நுண்ணிய வடிகட்டி, எதிர்மறை சவ்வூடுபரவுதல் மூலமாக வெளியேற்றப்படும் கழிவு இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீருடன் கலந்து நீர் வழித்தடங்களில் வெளியேற்றப்பட உள்ளது.

நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை எதிற்மறை சவ்வூடு பரவுதல் முறையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மற்றும் பகிர்மான குழாய்கள் பதிப்பதற்கு இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.255 கோடிகள் ஆகும்.

மிக அதிக தரமான தண்ணீர் தங்கு தடையின்றி தொழிற்சாலைகளுக்கு கிடைக்க இயலும். ஏரிகளில் சேமிக்கப்படும் மழைநீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுவது தவிர்க்கப்படும். இந்த நீரை சேமிப்பதன் மூலம் 45 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மக்களின் தேவைகளுக்கு உபயோகப்படுத்த இயலும்.

கழிவுநீர் சுத்திகரிக்க செலவிடப்படும் தொகையினை தொழிற்சாலைகளுக்கு கழிவுநீர் சுத்திகரித்து அனுப்புவதால் கிடைக்கும் வருவாய் மூலம் பெற இயலும். தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த ஏதுவாகிறது.

சென்னைக் குடிநீர் வாரியம் மறு சுழற்சி மூலம் உபயோகப்படுத்தப்பட்ட நீரினை மீண்டும் சுத்திகரித்து கட்டுமான பணிகளுக்கு தேவையான தரமான நீரை வழங்கவும் வீடுகள், பணியிடங்களில் உள்ள பூங்காக்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான நீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ஒப்பந்தப்புள்ளியில் கோரப்பட்டு, விரைவில் வெளியிடப்பட்டு, பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு வருட காலத்திற்குள் இப்பணி நிறைவுபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்