முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்: கவுடா

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.28 - எஸ்.ஆர்.எம்.யூ. கோரிக்கையை ஏற்று ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் தொகை வழங்குவதாக ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உறுதியளித்துள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. தெரிவித்துள்ளது.

மத்திய ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ராயபுரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றம் செய்வதற்கான ஆய்வினை மேற்கொள்ள சென்னை வந்தார். அவர் நேற்றுமுன்தினம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் என்.கண்ணையா, எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் சி.ஏ. ராஜா ஸ்ரீதர் மற்றும் ரெயில்வே ஊழியர்களை சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் என்.கண்ணையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உற்பத்தியின் அடிப்படையிலான போனஸ் பெறுவதற்கு 1979-ம் ஆண்டு அனைத்திந்திய ரெயில்வே சம்மேளனம் (ஏ.ஐ.ஆர்.எப்.) மற்றும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனுடன் (எஸ்.ஆர்.எம்.யூ.) செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அனைத்து ரெயில்வே ஊழியர்களும் தகுதி உடையவர்கள் ஆவர். இதற்கான உத்தரவு ஆயுத பூஜைக்கு முன்னர் ஆண்டுதோறும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தியின் அடிப்படையிலான போனஸ் தொகை திட்டத்தின் கீழ் இந்த ஆண்டும் 78 நாட்கள் போனஸ் தொகை வழங்குவதாக ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய நிதி அமைச்சகம் இதனை 69 நாட்களாக குறைப்பதற்கு முயற்சிகள் செய்தது.

இதற்கு ஏ.ஐ.ஆர்.எப்., எஸ்.ஆர்.எம்.யூ.வும் எதிர்ப்பு தெரிவித்தன. 78 நாட்கள் சம்பளம் போனஸ் தொகை வழங்கினாலும், ரூ.3,500 மாத சம்பளம் உச்ச வரம்பு காரணமாக ரெயில்வே ஊழியர்கள் ரூ.8,500-க்கு அதிகமாக போனஸ் தொகை பெறுவதில்லை.

போனஸ் தொகை மற்றும் போனஸ் தொகைக்காக கணக்கிடப்படும் நாட்களை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமேயானால் ரெயில்வே ஊழியர்களின் அதிருப்திக்கு உள்ளாவார்கள் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் என்.கண்ணையா தெரிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தையில் உற்பத்தியோடு இணைக்கப்பட்ட போனஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதுதொடர்பான விவரங்களை ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம் எடுத்து கூறினார். இதனையடுத்து 78 நாட்கள் போனஸ் தொகையை தருவதாக ரெயில்வே அமைச்சர் உறுதி அளித்தார்.

மேலும் தன்னுடைய நிலைப்பாட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 78 நாட்கள் போனஸ் தொகையை கொடுப்பதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்குமாறு சென்னையில் இருந்து கொண்டே ரெயில்வே வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கான ஆணையை பிறப்பிக்கும் பணியில் ரெயில்வே வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவது போன்று புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.யூ. தரப்பில் ரெயில்வே மந்திரியிடம் வலியுறுத்தப்பட்டது. இதனையும் அதிகாரிகளோடு கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சதானந்த கவுடா உறுதி அளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்