முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணிக்கு மதிமுக வந்தால் வரவேற்போம்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 31 – 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க. சேரும் என்று செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு அச்சாரமாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் இந்த கட்சி தலைவர்கள் சந்தித்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

அதன்படி நேற்று மகாபலிபுரத்தில் நடந்த டாக்டர் ராமதாசின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் சந்தித்துக் கொண்டனர்.

வைகோ, அவரது மனைவி ரேணுகாதேவி ஆகியோர் வந்து இருந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், சகோதரி செல்வி ஆகியோர் சந்தித்தனர். இரு குடும்பத்தினரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

வைகோ, ஸ்டாலினிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தார். ஸ்டாலின், வைகோவின் தாயாரின் உடல் நலம் பற்றி கேட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, ‘அன்பு சகோதரர் ஸ்டாலின் என்னை சந்தித்தது அரசியல் நாகரீகத்துக்கு சான்று’ என்றார். மு.க.ஸ்டாலினிடம், ‘இது கூட்டணிக்கு அச்சாரமா?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘உங்கள் விருப்பம் அது வென்றால் நிறைவேறும்’ என்று பதில் அளித்தார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று டாக்டர் ராமதாசின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகாபலிபுரம் புறப்பட்டார். அப்போது கோபாலபுரம் இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–

கேள்வி:– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து இருக்கிறார். இது தி.மு.க.–ம.தி.மு.க. புதிய கூட்டணிக்கு தொடக்கமா?

பதில்:– தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி.

கே:– டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் அவரையும் பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்திப்பீர்கள். இது புதிய கூட்டணி அமைய வாய்ப்பு ஏற்படுத்துமா?

ப:– அந்த கட்சிகள் விரும்பி புதிய கூட்டணி உருவானால் தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடி அதை மகிழ்ச்சியுடன் ஏற்கும்.

கே:– வைகோ–மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து உங்கள் கருத்து?

ப:– நாங்கள் பகைவர்கள் அல்ல. நீண்ட கால நண்பர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, சட்டசபை தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைவது இப்போது உறுதியாகிவிட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்