முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்த முடியுமாம்!

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

லண்டன்: மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட அவற்றை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள யாரிடமிருந்தாவது தானமாக கிடைக்குமா என்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காத்து கிடக்கின்றனர். அமெரிக்காவில் மட்டுமே 1 லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் காத்து கிடக்கின்றனர்.

எனினும் உடல் உறுப்புகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் பலனாக பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும் என்ற விஷயத்தை கண்டறிந்தனர்.

மரபணுக்களில்...
எனவே பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் கிடக்கும் பெர்வ் எனப்படும் போர்சின் எண்டோஜீனஸ் ரெட்ரோ வைரஸ்களை (Porcine Endogenous Retro Viruses) அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி கண்டுள்ளனர்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியல் நிபுணர்கள் ஜார்ஜ் சர்ச் மற்றும் லுகான் யங் ஆகியோர் இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ளனர். இதுவரை 37 பன்றி உறுப்புகளில் பெர்வ் வைரஸ் தொற்றுகள் அகற்றப்பட்டுள்ளன.

மனிதர்களுக்கு பொருத்த முடியும்
எதிர்காலத்தில் இத்தகைய தொடர் ஆய்வுகளின் மூலம் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெனோ மாற்று அறுவை சிகிச்சை
ஒரு இனத்திலிருந்து மாறுபட்ட இனத்திற்கு உறுப்புகளையோ திசுக்களையோ பொருத்துவது அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முறைக்கு ஜெனோ மாற்று அறுவை சிகிச்சை எனப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து