முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாகூரில் அரசியல் கட்சி அலுவலகம் : தீவிரவாதி ஹபீஸ் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

லாகூர் :   சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் தனது அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார்.

அல்-காய்தா அமைப்பில் ஆயுதப் பயிற்சி பெற்ற ஹபீஸ் சயீது லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பையும் அதற்கு நிதி திரட்ட ஜமாத் உத்-தவா என்று தொண்டு நிறுவனத்தையும் தொடங்கினார். இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தாக்குதல்களில் ஹபீஸ் சயீதுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

இதன்காரணமாக ஐ.நா. சபையும் அமெரிக்க அரசும் அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது. உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாக லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. மேலும் கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால் அண்மையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

லஷ்கர், ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் ஹபீஸ் சயீது அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதற்கு அங்கீகாரம் வழங்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தப் பின்னணியில் லாகூரின் மோஹ்னி சாலையில் மில்லி முஸ்லிம் லீக் கட்சியின் அலுவலகத்தை ஹபீஸ் சயீது தொடங்கினார். அவர் கட்சி அலுவலகத்துக்கு காரில் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக நின்று மலர்களை தூவி வரவேற்றனர்.

சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுவதையும் புதிதாக அரசியல் கட்சி அலுவலகம் திறந்திருப்பதையும் மேற்கத்திய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து