முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாற்றில் முதல்முறையாக, சுப்ரீம கோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை எனக் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என மூத்த நீதிபதிகள் 4 பேர் நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். மேலும், அவர்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நான்கு நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தில், தலைமை நீதிபதி என்பவர் மற்ற நீதிபதிகளில் முதன்மையானவர் மட்டுமே, அதற்கு மேலும் அல்ல, அதேசமயம் கீழும் அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களை...
சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 பேர் நேற்று காலை திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர்.

அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்.,

கடிதம் எழுதினோம்
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை சில காலத்திற்கு முன்னதாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வலியுறுத்தினோம் ...
நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும் எனக்கூறினர். இதன் பின், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம் எனக்கூறினர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறினர்.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

ஆங்கிலேயர் கால...
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த சில உத்தரவுகள், ஒட்டுமொத்தமாக நீதித்துறையின் செயல்பாட்டை பாதித்துள்ளது குறித்து எங்கள் கவலையை தெரிவிக்கவே இந்த கடிதத்தை எழுதியுள்ளோம். இது ஐகோர்ட்டுகள் மற்றும் தலைமை நீதிபதி அலுவலக செயல்பாடு நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறோம். கொல்கத்தா, மும்பை, சென்னையில் உள்ள ஐகோர்ட்டுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது முதலே சில நடைமுறைகளையும், மரபுகளையும் பின்பற்றி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டின் இந்த செயல்பாடுகளால் இந்த நீதிமன்றங்களும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன.

முதன்மையானவர் ...
வழக்குகளை பட்டியலிடுவது என்பது, அதன் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வது என்பதும், தேவை ஏற்படும்போது, அமர்வுகள், நீதிமன்றங்களையும் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வதும், அமர்வின் நீதிபதிகளை முடிவு செய்வதும், தலைமை நீதிபதியின் தனியுரிமை என்பது மரபாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.  வழக்குகளை ஒதுக்கீடு செய்வது என்பது எந்த மேல் அதிகாரிகளின் சட்ட உரிமையாக அங்கீகரிக்கப்படாதபோதும், நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற இந்த வழிமுறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சட்டப்படி நீதிபதிகளில், தலைமை நீதிபதி முதன்மையானவர் ஆவர். ஆனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்களோ அல்லது உயர்வானவர்களோ இல்லை.

தர்மசங்கடத்தை...
வழக்குகளை பட்டியலிடும் நடைமுறை என்பது சரியான முறையிலும், உரிய நேரத்திலும் நடைபெற தலைமை நீதிபதி வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற மரபுகள், நீதிமன்றத்திற்கு கூடுதல் வலிமையை தருவதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் வழக்கின் தன்மை, அதில் தொடர்பான விஷயங்ளை கருத்தில் கொண்டு வழக்குகள் பட்டியலிடப்படுவதும், அமர்வுகள் முடிவு செய்யப்படுவதும் இருக்க வேண்டும். ஆனால், இது சம்பந்தபட்ட நீதிபதிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பது மிக முக்கியம்.

பதில் அளிக்கவில்லை...
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நான்கு பேர் நியமனத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஆர்.பி ருத்ரா தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாகவும், நீதிபதிகள் தேர்வு தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த பரிந்துரைகள் அடிப்படையிலும் நடைமுறைகளை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாதன அமர்வு பிறப்பித்த உத்தரவு, வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானதாகும். இதுதொடர்பாக நீங்களும் இடம் பெற்றுள்ள கொலிஜியத்துடன், அரசியல் சாசன அமர்வு கருத்துக்களை கேட்டறிந்தது. இதுதொடர்பாக தலைமை நீதிபதியின் கேள்விக்கு, மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. கொலிஜியம் உருவாக்கும் தேர்வு நடைமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மறு பரிசீலனை...
நீதிபதி கர்ணன் தொடர்புடைய தீர்ப்பில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு சில யோசனைகளை தெரிவித்தது. நீதிபதிகள் தேர்வு மற்றும் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இரு நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். தேர்வுக்கான வழிமுறைகளை உருவாக்கும்போது வெளிப்படை தன்மையுடனும், இருக்க வேண்டும்., அரசியல் சாசன அமர்வுடன் மட்டும் விவாதிக்கப்பட வேண்டிய விவரம் அல்ல. அதையும் தாண்டி முழு நீதிமன்றத்திற்கும் இந்த விவகாரங்கள் தெரிய வேண்டியது அவசியம்.

எனவே இந்த விவகாரம் 27.10.2017 தங்களுடைய உத்தரவினை தொடர்ந்து மத்திய அரசால் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மீக உரிமையும் தங்களுக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அது அமையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வரா, ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

பிரதமர் ஆலோசனை
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இப்படி பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ள விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து