மக்கள் பயன்பெறும் வகையில் 3200 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி தகவல்

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      தமிழகம்
CM Edapadi 2017 9 3

சென்னை: மக்கள் பயன்பெறும் வகையில் 521 புதிய திட்டங்கள் அறிவித்தும், 3,200 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 2,329 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புள்ளிவிவரத்துடன் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு கவர்னர் 8-ம் தேதி அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கான முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பதில் அளித்து கூறியதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டில் எப்பொழுதும் ஆர்வம் காட்டிவரும் அம்மாவின் அரசு, பழங்குடியினர்களின் கல்வி மேம்பாட்டிற்கென திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் செங்காட்டுப்பட்டி மாணாக்கர்களுக்கு விடுதியும், பச்சமலை மற்றும் தென்புற நாட்டில் இரண்டு சமுதாயக் கூடங்களும், ஜவ்வாது மலையில் இரண்டு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர் குடியிருப்புகள் 30.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் அறிஞர்கள் மற்றும் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்பு செய்தவர்களை அம்மாவின் அரசு பெருமைப்படுத்தி வருகிறது.

அதன்படி, அறிவியல் தமிழறிஞர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பெயரில் புதியதாக ஒரு விருது தோற்றுவிக்கப்பட்டதுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோருக்கு 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டு 31.12.2017 அன்று என்னால் துவக்கிவைக்கப்பட்டது.மேலும், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ஒரு மணி மண்டபம் கட்டப்படும் என தூத்துக்குடி மாவட்டத்தில் 22.11.2017 அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது நான் அறிவித்திருந்தேன். இது தவிர, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 2.80 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு நினைவு மண்டபம் அமைத்து 1.10.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கலைவாணர் அரங்கம் 62.73 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.


ஜெயலலிதாவுக்கு...
இவ்வாறு தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த பலருக்கு பல்வேறு விருதுகளை வழங்கியும், மணி மண்டபம் மற்றும் நினைவு மண்டபங்களை கட்டி பெருமை சேர்த்த அம்மாவின் நினைவைப் போற்றும் வகையில் அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு நினைவு மண்டபம் அமைக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அம்மா குடியிருந்த ‘வேதா நிலையத்தை’ அரசுடைமை ஆக்கி, அவர்தம் நினைவும், புகழும், மேன்மையும், சிறப்பும், அடுத்து வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக ஒரு நினைவுச் சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நினைவு வளைவு...
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் ஒரு மாபெரும் நினைவு வளைவு அமைக்கப்படவுள்ளது என்பதை இம்மாமன்றத்திற்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  சுற்றுலாவுக்கு உகந்த இடமாக தமிழ்நாடு உள்ளது என்பதற்குச் சான்றாக கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.

30 மாவட்டங்களில்...
பக்தர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, கடந்த ஆண்டில் 30 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது. 655 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு 1.11.2017 அன்று பழமை மாறாமல் திருப்பணி மேற்கொண்டதற்கு ‘‘யுனெஸ்கோ” நிறுவனம் விருது வழங்கியுள்ளது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு 2.10.2017 அன்று தூய்மை இந்தியா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2.5.2017 அன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், 2017 டிசம்பர் வரை 30 மாவட்டங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

521 புதிய திட்டங்கள்
அந்தந்த மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் 521 புதிய திட்டங்கள் அறிவித்தும், 3,200 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 2,329 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.

அரசு ஆணை ...
இவ்வாறு பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருவதுடன், சட்டப் பேரவை விதி 110ன் கீழும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதன் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு 2017-18-ம் நிதி ஆண்டில் சட்டமன்றத்தில் சட்டமன்ற விதி 110-ன் கீழ் நான் 102 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் 76 அறிவிப்புகளுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு, 8 அறிவிப்புகளுக்கான பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டும். 68 பணிகள் நடைபெற்றும் வருகின்றன. 23 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 3 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து