முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாக். ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் தமிழக வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

அத்துமீறி...

காஷ்மீரில் உள்ள இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயுத பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய வைப்பதற்காக இத்தகைய எல்லை அத்துமீறலில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடுகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய முயன்ற போது இந்தியா கடும் பதிலடி கொடுத்தது. அதில் 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வீர மரணம்...

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பாகி்ஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று அதிகாலை வரை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்திய போது சில வீரர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு ராணுவ வீரர் சுரேஷ் குண்டுகள் பாய்ந்து வீர மரணம் அடைந்தார். தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கதறி அழுத...

வீரமரணமடைந்த சுரேஷ் தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பண்டாரா செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர். இவர் எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். வீரர் சுரேஷூக்கு ஜானகி என்ற மனைவியும், 14 வயதில் புனஜா என்ற மகளும், 9 வயதில் அதர்வ் என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய் அலுவலர் பழனி ஆகியோர் நேரில் சென்று வீரர் சுரேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 42 வயதான சுரேஷ் கடந்த 22 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார்.

4 பாக். வீரர்கள்...

இதற்கிடையே காஷ்மீர் எல்லையில் நேற்று காலை வரை சண்டை நீடித்தது. தமிழக வீரர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்திய வீரர்கள் எல்லையில் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தானின் 4 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன. இந்த சண்டையால் சியோல் கோட் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து