தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் தாமதம் செய்வது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தமிழகம்
Madurai high court branch 2017 9 4

மதுரை : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் தாமதம் செய்வது ஏன் என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக வரும் ஜூன் 14-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
 

ஜெட்லி அறிவிப்பு.

கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி கடைசியில் பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகம், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

5 இடங்களில்...

எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கத் தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து எய்ம்ஸ் மையத்தை அமைக்கலாம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் மூலம் குறிப்பிட்டார்.

இடங்கள் குறித்து...

2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு கூறுகையில், 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு பரிந்துரை செய்த இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவமதிப்பு வழக்கு...

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்று கேட்டு மத்திய அரசு மீது கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காலதாமதம் ஆவதற்கு காரணம் என்ன என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, வரும் ஜூன் 14-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து