2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      விளையாட்டு
SA win 2nd test 2018 3 12

போர்ட் எலிசபெத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

டி வில்லியர்ஸ் சதம்

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வார்னர் 63 ரன்கள் அடிக்க, ரபாடா ஐந்து விக்கெட் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா டி வில்லியர்சின் அபார சதம் (126 அவுட் இல்லை), டீன் எல்கர் (57), அம்லா (56) அரைசதங்களால் 382 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


ஆஸி. திணறல்...

பின்னர் 139 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. வார்னர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். பான்கிராப்ட் 24 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் க்ளீன் போல்டானார். நட்சத்தி வீரர் ஸ்மித் 11 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 1 ரன்னிலும் வெளியேற, ஆஸ்திரேலியா 86 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

4-வது நாள் ஆட்டம்

6-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் விக்கெட் கீப்பர் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 39 ரன்னுடனும், பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெய்ன் தாக்குப்பிடித்து விளையாட மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கம்மின்ஸை 5 ரன்னில் வெற்றியேற்றினார். இதன்மூலம் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார்.

239 ரன்னில் ஆல்அவுட்

அடுத்து வந்த ஸ்டார்க் 1 ரன்னிலும், நாதன் லயன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 211 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது. கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஹசில்வுட் 17 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பெய்ன் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 6 விக்கெட்டும், மகாராஜ், நிகிடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

101 ரன்கள் வெற்றி....

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 139 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஒட்டுமொத்தமாக சரியான 100 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 101 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் மார்க்ரம் 21, எல்கர் 5, ஆம்லா 27, டி வில்லியர்ஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி 22.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து இந்த டெஸ்ட் போட்டியை வென்றது. டு பிளெஸ்ஸிஸ் 2, புருய்ன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில் லயன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.  இரு அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் மார்ச் 22 அன்று தொடங்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து