முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா வரும் 29-ம் தேதி வரை நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் தமிழ் மொழி கவுன்சில் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி திருவிழா எம்.இ.எஸ் தியேட்டர் வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவை சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் நடத்தப்படும் இலக்கியம், பேச்சுப் போட்டி, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் தமிழர்கள் பங்கேற்கலாம். இந்தத் திருவிழாவில் தமிழகம், இலங்கை உட்பட உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்விழாவில் மொத்தம் 49 பங்கேற்பாளர்கள் மற்றும் 4 பள்ளிகளின் சார்பில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இதில் 11 புதிய பங்கேற்பாளர்கள் சார்பில் நடனம், நாடகம் மற்றும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து தமிழ் மொழி கவுன்சில் தலைவர் ராஜாராம் கூறும் போது, இளைய தலைமுறையினர் தமிழில் பேசுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ் மொழி கவுன்சில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இவ்விழாவில் தமிழ் மொழி ஆர்வலர்கள், இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து