டோக்லாம் எல்லை விவகாரம்: சீன வெளியுறவு ஆணைய இயக்குநருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      உலகம்
China border sikkim 2017 7 5

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜிச்சியுடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா, சீனா, பூடான் எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியில் கடந்த ஆண்டு சீனப் படைகள் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்க முயன்றது. அதனை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, இரு நாட்டின் படைகளும் டோக்கா லாமில் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர், அப் பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெற இரு தரப்பும் ஒப்புக் கொண்டதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. எனினும், இந்த விவகாரத்தால் இரு தரப்பு உறவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. அவற்றை சரிசெய்யும் முயற்சிகள் பரஸ்பரம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜிச்சியுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஷாங்காய் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பு சிறப்பு பிரதிநிதிகளான இவர்கள், டோக்கா லாம் பிரச்சினைக்கு பிறகு தற்போது 2-ஆவது முறையாக சந்தித்துப் பேசியுள்ளனர்.


இந்தியா - சீனா இடையேயான உயர்நிலை தொடர்புகளின் ஒரு பகுதியாகவே இருவரும் சந்தித்ததாகவும், இருதரப்பு நலன்கள் சார்ந்த பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து