முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27 வது ஐபிஎல் போட்டியில் சென்னையை சூப்பர் கிங்ஸை - மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

புனே: புனேயில் நடைபெற்ற 27வது ஐபிஎல் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஓவர்களில் 97/1 என்ற சிறப்புக்கட்டத்திலிருந்து 20 ஒவர்களில் 169/5 என்று சரிந்தது. பிறகு இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா (56), சூரியகுமார் யாதவ் (44), எவின் லூயிஸ் (47) ஆகியோரது ஆதிக்கத்தினால் 170/2 என்று வெற்றி பெற்றது.

சுரேஷ் ரெய்னா தொடக்க ஷார்ட் பிட்ச் சோதனைகளைக் கடந்து வந்து 47 பந்துகளில் 75 ரன்கள் என்று இறுதி வரை நின்ற போதும் சென்னை எப்படி 185-190 ரன்களை எட்டாமல் போனது என்பது புரியாத புதிர்! தோனி மீண்டும் வைடான யார்க்கர் முயற்சி புல்டாஸை நீட்டிக் கொண்டு அடிக்க கவரில் எவின் லூயிஸ் கையில் போய் விழுந்தது, இது ஒரு திருப்புமுனை என்றால் மெக்லினாகன் இதே ஓவரில் பிராவோவுக்கு ஒரு ஏத்து ஏத்த பாயிண்டில் முடிந்தார், டக் அவுட்.

இந்த இரண்டு விக்கெட்டுகளினால் 143/2 என்று இருந்த சென்னை 144/4 என்று ஆனது.
அன்று பவன் நெகியிடம் எப்படி விக்கெட் கொடுக்க மனம் வந்ததோ ஷேன் வாட்சனுக்கு நேற்று 1 பவுண்டரியுடன் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து 5வது ஓவரின் 2வது பந்தில் குருணால் பாண்டியா பந்தை ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தொடக்கத்தில் ஜஸ்பிரீத் பும்ரா தன் பவுன்ஸ் மூலம் அம்பாத்தி ராயுடுவின் பேட்டிங் தரத்தை சோதித்தார். ஆனால் பும்ராவை பிறகு வீசுவதற்காக உடனே கட் செய்தார் ரோஹித் சர்மா, ஒருவேளை தொடர்ந்து கொடுத்திருந்தால் வேறு ஒரு தரநிலை பவுலிங்கிற்கு எதிரான ராயுடுவின் பலம் தெரிந்திருக்கும், அவுட் கூட ஆகியிருப்பார்.

ஆனால் அதன் பிறகு ராயுடு அற்புதமாக ஆடினார், அப்படித்தான் அவர் ஆடி வருகிறார். பாண்டியா உண்மையில் நன்றாகவே வீசினார், பவர் ப்ளேயில் அவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 10 ரன்கள் என்றாலும் ரோஹித் அவரைக் கொண்டுவந்தார். 4 பந்துகள் 2 ரன்கள்தான், ஆனால் கடைசியில் ஒரு கூடுதல் பவுன்ஸ் கொண்ட பந்துக்கு எட்ஜ் பவுண்டரி ஒன்றையும் கடைசியில் மிக அருமையாக புல் லெந்த் பந்தை லாங் ஆஃப் மேல் சிக்ஸரும் அடிக்க ஸ்கோர் 6 ஓவர்களில் 51/1 என்று இருந்தது. முன்னதாக குருணால் பாண்டியாவையும் ஒரு பிளிக் சிக்ஸ் அடித்திருந்தார் ராயுடு, ரெய்னா இறங்கி தன் பாணியில் ஒரு குறுக்குசால் ஓட்டி மிட்விக்கெட்டில் குருணாலை ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்.

ரெய்னாவுக்கு கடும் ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்கப்பட்டது, அருகில் 3 பீல்டர்களை நிறுத்தி அவரை குதிக்க வைத்தனர். ஆனாலும் நேராக அவரது உடலுக்கு ஷார்ட் பிட்ச் வீசவில்லை. இதனால் ஷார்ட் பைன் லெக் தாண்டி 2 பவுண்டரி அடித்தார், ஷார்ட் பிட்ச் சரியாக வீசத் தெரியவில்லை அல்லது நேற்று அமையவில்லை, இதனால் ரெய்னா செட்டில் ஆகி தனக்குச் சாதகமான, தூக்கத்தில் எழுந்து அடிக்கச் சொன்னால் கூட அடிக்கும் லாங் ஆன் மிட்விக்கெட் பகுதிகளில் ஒரு 40 ரன்கள் பக்கம் அடித்தார். மயங்க் மார்க்கண்டேயை ரெய்னா நேராக ஒரு பவுண்டரி பிறகு ஏறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ் விளாசினார். முதல் ஓவரில் 3 ரன்கள் கொடுத்த மார்க்கண்டே இந்த ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார். 10 ஓவர்களில் 91/1 என்று இருந்த போது ரெய்னா 17 பந்துகள்ல் 31 என்றும் ராயுடு 32 பந்துகளில் 45 என்றும் இருந்தனர்.

அதன் பிறகு மும்பை நடுஓவர்களை இறுக்கிப் பிடித்தது. ராயுடு 46 ரன்களில் குருணால் பாண்டியா பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 11வது ஓவரில் 6 ரன்கள், 12 வது ஓவரில் ராயுடு விக்கெட்டுடன் 2 ரன்கள், 13வது ஓவரில் பும்ரா அபாரமாக வீச தோனி, ரெய்னா இருந்தும் 1 ரன் மட்டுமே வந்தது. மீண்டும் 14வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. 15வது ஓவரில்தான் தோனியிடம் சிக்கினார் பாண்டியா, லாங் ஆஃபில் பந்து நசுங்கிவிடும் போல் ஒரு அறை, பிறகு அசட்டுத்தனமாக தோனிக்கு ஒரு ஷார்ட் பிட்ச் முயற்சி செய்ய மிட்விக்கெட்டில் விளாசினார்.

மயங்க் மார்க்கண்டே ஓவரில் தோனிக்கு ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை இஷான் கிஷன் விட்டார்.. (உஷ்!) மறுபடியும் கிரிக்கெட்டின் எழுதப்படாத விதியின் படி கேட்ச் விட்டாலோ, ஸ்டம்பிங் விட்டாலோ என்ன ஆகும், தோனி அடுத்த பந்தை ஒரு ஸ்டெப் எடுத்து வைத்து லாங் ஆன் ஸ்டாண்ட்சுக்கு அனுப்பினார். அடுத்த ஓவரில் ரெய்னா பும்ராவின் இரண்டு மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 35 பந்துகளில் அரைசதம் கண்டார்.


மெக்லினாகன் திருப்பு முனை ஓவர்:

17 ஓவர்கள் முடிவில் 143/2. ரெய்னா, தோனி என்ற இறுதி ஓவர் விளாசல் ஜோடி களத்தில், ஆனால் மெக்லினாகன் வேறு சில யோசனைகளைத் தன் வசம் வைத்திருந்தார்.

18வது ஓவரில் தோனிக்கு அனைவரும் செய்யும் வைடு ஆஃப் திசை பந்தை வீசினார், இம்முறை இது புல்டாஸ், தோனி நீட்டிக்கொண்டு அடித்தார் டீப் கவரில் கேட்ச் ஆகி 26 ரன்களில் வெளியேறினார்
ரெய்னா ஒரு ரன் எடுத்து பிராவோவிடம் ஸ்ட்ரைக் கொடுக்க மெக்லினாகன் கூடுதல் பவுன்ஸ் செய்தார், பிராவோவின் புல்ஷாட் மார்க்கண்டேயிடம் லெக் சைடில் கேட்ச் ஆனது, டக் அவுட் ஆனார் பிராவோ. கடைசியில் பும்ரா ஷார்ட் பிட்ச்சை ரெய்னா ஒரு சிக்சர், மீண்டும் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி பந்தில் இன்னொரு சிக்சரை ரெய்னா அடிக்க சென்னை அணி 169/5 என்று முடிந்தது. ரெய்னா 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 75 நாட் அவுட்.

ரோஹித், சூரியகுமார் யாதவ் அபாரம்:
காட்டடி மன்னன் எவின் லூயிஸ் சரியாக ஆடவில்லை, அவரது பேட்டிங் எடுபடவில்லை. 26 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார், ஆனால் அவருக்கென்றே வந்து சிக்கிய இம்ரான் தாஹிரை கவரில் ஒரு அரக்க சிக்சரையும் அதேஓவரில் லாங் ஆனில் பந்து இறங்குமா என்ற சந்தேகம் எழுமாறு இன்னொரு சிக்சரையும் அடித்தார் லூயிஸ்.
அடுத்த வாட்சன் ஓவரில் ரோஹித் சர்மா லாங் ஆஃபில் ஒரு கையில் சிக்ஸ் அடித்தார். அவரது பாட்டம் ஹேண்ட், மட்டையின் பவர் ஆகியவற்றினால் சிக்ஸ் ஆனது. பிறகு வாட்சனை ஸ்வீப் சிக்ஸ். இது ஸ்வீட் சிக்ஸ்.
முன்னதாக சூரிய குமார் யாதவ், எவின் லூயிஸ் திணறலுக்கு ஈடு கட்டி தனது அபாரமான பார்மைத் தொடர்ந்து பயன்படுத்தி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் விளாசி ஹர்பஜன் பந்தை புல் ஷாட் ஆட ஜடேஜா இடது புறம் ஓடி பிறகு டைவ் அடித்து கிளாஸ் கேட்சை எடுக்க ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 71/1 என்று நல்ல நிலையில் இருந்தது மும்பை.

அதன் பிறகு தோனியின் களவியூகத்துடன் விளையாடினார் ரோஹித் சர்மா, பிராவோவை ஒரு புல்ஷாட் பவுண்டரி, வாட்சனை தூக்கி அடித்த ஒரு பவுண்டரி என்று ரோஹித் தன்னை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா வாட்சனின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி லாங் ஆனில் அனாயசமாக ஒரு சிக்ஸ் அடித்தார்.

கடைசி 2 ஓவர்களீல் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூரை 4 பவுண்டரிகள் விளாசினார். அன்று பந்தை சாத்துக்குடியாகப் பிழிந்து டிவில்லியர்ஸுக்குக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார், நேற்று ஃபுல் லெந்த்தில் வீசி ரோஹித்திடம் சிக்கினார். அதுவும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை ஸ்வீப் அடித்து பவுண்டரிக்கு அனுப்பியது தாக்கூர் ரக பவுலிங்கிற்கு ஒரு பாடம். இந்த ஷாட் ரோஹித் சர்மாவின் அரைசதமானது. 20வது ஓவரில் வெற்றி வந்தது. சாஹர் காயமடைந்ததும் ஒரு பின்னடைவுதான். ரோஹித் சர்மா ஆட்ட நாயகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து