முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி நகராட்சிக்கான குடிநீர் திட்ட துவக்க விழா: நடிகர் ரஜினி மீது முதல்வர் எடப்பாடி மறைமுக தாக்கு காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பை பற்றி பேசுவதா?

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      தமிழகம்
Image Unavailable

கோவில்பட்டி: காலம் போன காலத்தில் நதிகளை இணைக்க வேண்டும் என சொல்வதா? என்று நதிகள் இணைப்பு பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்தை கோவில்பட்டியில்  நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி மறைமுகமாக தாக்கி பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ. 81.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2-வது பைப் லைன் திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும், ரூ.127.24 கோடி மதிப்பிலான 130 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் ரூ. 4779.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பேசியதாவது.,

உங்களுடைய அரசு
எங்கு எங்கு எல்லாம் பாலங்கள் வேண்டுமோ, அங்கே எல்லாம் பாலப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அம்மாவுடைய ஆட்சி பொற்கால ஆட்சி, அம்மா என்னென்ன கனவுகள் கண்டார்களோ அதை எல்லாம் அம்மாவுடைய அரசு இன்றைக்கு நனவாக்கி கொண்டிருக்கிறது. இது உங்களுடைய அரசு, இது மக்களுடைய அரசு, மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுகின்ற அரசு அம்மாவுடைய அரசு. இன்னும் பல பேர் இங்கே புதிய புதிய கட்சிகள் எல்லாம் துவக்கியுள்ளார்கள். புதிய கட்சிகள் துவங்குவது குறித்து வேறுபட்ட கருத்து எங்களுக்கு கிடையாது. ஆனால் இதுநாள் வரை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

நதிகளை இணைக்க...
இன்றைக்கு நதிகள் எல்லாம் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காலம் போன காலத்தில் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அம்மா, சட்டப் போராட்டத்தை நடத்தி, அது முடிகின்ற தருவாயிலே இப்போது புதிதாக பல தலைவர்கள் முளைத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆகவே, நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம். வேறு எந்த கட்சியும் கிடையாது.

நேர்மையான அரசு...
இன்றைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் எல்லாம், இந்த அரசு மீது குற்றம் சுமத்துகிறார்கள். அம்மாவின் அரசை பொறுத்தவரை இன்றைக்கு நேர்மையான அரசாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அம்மா விட்டுச் சென்ற பணிகளை துல்லியமாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறோம். இந்திய அளவிலே எடுத்துக் கொண்டால், இன்றைக்கு போக்குவரத்து துறையாக இருந்தாலும் அதற்கு தேவையான பரிசை பெறுகின்றோம். மின்சார துறையாக இருந்தாலும் அதற்கு தேவையான பரிசை பெறுகின்றோம். வேளாண்மை துறையாக இருந்தாலும்  இந்தியாவிலே பரிசை பெறுகின்றோம். ஆகவே, எல்லா துறைகளிலும் இன்றைக்கு முன்னோடி துறையாக விளங்கி கொண்டிருக்கிறது.

வாக்குறுதி தந்தார்கள்
மருத்துவ துறையாக இருந்தாலும் இந்தியாவிலே முதல் பரிசு பெறுகின்றோம். கல்வியிலும் முதல் பரிசு. ஆக எல்லா துறைகளுமே இன்றைக்கு சிறப்பாக விளங்கிடும் அரசாக அம்மாவுடைய அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அம்மா இந்த நாட்டுக்காக உழைத்தவர். எனக்கு முன்னாலே, அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்னது போல,  எனக்கு பின்னாலும் நூறாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து, இந்த நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொடுக்கும் என்ற வாக்குறுதி தந்தார்கள்.

அதன் அடிப்படையிலே இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கிராமத்திலே வாழ்கின்ற ஏழைகள் கூட உயர்நிலைக்கு உருவாவதற்கு அனைத்து திட்டங்களையும் வகுத்து, அதை உங்கள் இல்லம் போய் சேருகின்ற அளவிற்கு நடைமுறைப்படுத்துகின்ற அரசாக திகழும் திகழும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து