முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடக முதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்புக்கு முன்பாக தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில், குமாரசாமியை ராஜ்பவனுக்கு வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கவர்னரை சந்தித்தார் குமாரசாமி. அப்போது ஆட்சி அமைக்க வருமாறு குமாரசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் பதவியேற்க கவர்னர் தம்மை அழைத்திருப்பதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் தந்திருப்பதாகவும் கூறினார். வரும் புதன்கிழமை பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்த ஏதுவாக ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவோம். இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், நேற்று குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக முதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என தெரிவித்தார். முதல்வராவதற்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா மற்றும் ராகுல் காந்திக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முதல்வராக 23-ம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில் டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து