முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கேரள மாநிலம்: வெள்ளம் - மண்சரிவுக்கு இதுவரை 100 பேர் பலி -பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் பார்வையிட்டார்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில எதிர்க்கட்சி தலைவருடன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்மேற்கு பருவமழை

கேரளாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழை பெய்தது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது என 40-க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானார்கள்.

சாலைகள், பாலங்கள் சேதம்

எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 8-ம் தேதிக்கு மேல் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

அதிகப்படியான நீர் வரத்தால் கேரளத்தின் 24 அணைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலுவா சிவன்கோவில் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியது. பல கிராமங்களும் அழிந்தன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். கடற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கேரளம் விரைந்தனர். அவர்கள் கொச்சி, ஆலுவா, கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்தனர்.

100-ஐ  தாண்டும்...

கடற்படையினர் படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவத்தினர் சேதமடைந்த சாலைகளையும், உடைந்த பாலங்களையும் தற்காலிகமாக சீரமைத்து பொதுமக்களையும், முதியவர்களையும் மீட்டு வந்தனர். கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினமும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மழை வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இவர்களையும் சேர்த்தால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என கூறப்படுகிறது.

50 ஆண்டுகளில்...

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு கேரள அணைகள் நிரம்பியதையே சாட்சியாக கூறுகிறார்கள். பல கிராம மக்களும் இப்படியொரு மழையை இதுவரை பார்த்ததில்லை என்று மிரட்சியுடன் கூறினர். கேரளாவின் ஆதிவாசி கிராமங்களும் மழையால் முழுமையாக சேதமடைந்து விட்டது. இங்கும் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மூணாறில் 61 பேர் மீட்பு

மூணாறை அடுத்த பள்ளிவாசல் என்ற மலைப்பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. பலத்த மழையால் இந்த விடுதியின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் விடுதிக்கு செல்லும் பாதை மூடியதால் அங்கு தங்கி இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 61 பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

தற்காலிக பாலங்கள்

எர்ணாகுளத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் நேற்று இடுக்கி வந்தனர். அவர்களை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

அதிகாரிகளுடன் ஆய்வு

கேரளாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த மாநில முதல்வர் பினராய் விஜயன் இன்று வரையிலான அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். நேற்று அவர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை  பார்வையிட்டார்.  இதில் அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும் உடன் சென்றார். இடுக்கி அருகே உள்ள கட்டப்பனா பகுதியில், அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டு இருந்தார்.  ஆனால், கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக வயநாடு சென்ற கேரள முதல்வர் பினராய் விஜயன், நிவாரண முகாம்கள் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து