முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை அருகே எருமை மாடுகளை பலியிடும் விநோதத் திருவிழா

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      சிவகங்கை
Image Unavailable

 சிவகங்கை,-சிவகங்கை அருகே எருமை மாடுகளை பலியிட்டு,அதன் ரத்தத்தை  குடிக்கும்  விநோதத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே பையூர் பழமலை நகர் உள்ளது. இங்கு நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொடூரக் காளி, மதுரை வீரன், மீனாட்சி, முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  
இந்நிலையில் பழமலை நகரில் உள்ள நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்தோர் தங்களது குலதெய்வங்களுக்காக ஆண்டு தோறும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். மேலும் இந்த  விழாவில் இறைவனின் அருள் வாக்கு கூறுபவர்கள் (சாமியாடிகள்) ஏராளமான எருமை  மாடுகளை  பலியிட்டு,அதன்  ரத்தத்தை குடிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தாண்டு திருவிழா  ஜூலை 20 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவான எருமை மாடுகளை பலியிடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கொடூரக் காளி உள்ளிட்ட  தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
 இதையடுத்து திருவிழா திடலில் அமைக்கப்பட்டுள்ள பலிபீடக் குடிலில் 27 எருமை மாடுகள், 31 ஆடுகள் பலியிடப்பட்டன. அப்போது அருள் வாக்கு கூறுபவர்கள் எருமை மாட்டிலிருந்து வந்த ரத்தத்தை குடித்தனர்.
அதைத் தொடர்ந்து காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  இவ்விழாவை காண்பதற்காக சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
இதுகுறித்து பழமலை நகரைச் சேர்ந்த நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறியது:  எங்கள் முன்னோர்களின் அறிவுறுத்தலின் படி சுமார் 25 தலைமுறைக்கும் மேலாக இந்த வழிபாடு நடைபெற்று வருகிறது. காப்புக் கட்டுதல் நிகழ்விலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு மாதம் விரதமிருந்து இந்த வழிபாடு நடத்தப்படும். 
இவ்விழாவில் வெட்டி பலியிடப்படும் எருமை மாடு மற்றும் ஆட்டின் இறைச்சியை எங்களது இனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ள பகுதிகளுக்கு பகிர்ந்து கொடுத்து அனுப்புவோம்  என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து