மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம்:சி.பி.ஐ. விளக்கம்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      இந்தியா
cbi court(N)

புதுடெல்லி,தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவருக்கு எதிராக கண்காணிப்பு நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விளக்கமளித்துள்ளது.அந்தத் தருணத்தில் தவறான சில முடிவுகளை எடுத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, விஜய் மல்லையா தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார்.

மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பாக அவருக்கு எதிராக சில லுக் அவுட் சர்குலர்களை சி.பி.ஐ. பிறப்பித்தது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றால் அவரைக் கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் அமைப்புகளுக்கு அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதை கடுமையாக பின்பற்றுமாறு சி.பி.ஐ. அறிவுறுத்தவில்லை எனத் தெரிகிறது. மல்லையாவை கைது செய்ய வேண்டாம் என்றும், அவரது நடமாட்டத்தை கண்காணித்தாலே போதுமானது என்றும் அந்த அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 2-இல் தப்பிச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அமைப்பின் லுக் அவுட் சர்க்குலர் விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதுதொடர்பாக அவ்வப்போது விளக்கங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறியதாவது:மல்லையாவை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தபோது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனெனில் அவர், அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். மேலும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவேஅவரை கைது செய்யுமாறு எந்த காவல் அமைப்பிடமும் நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், அது தவறான முடிவாக மாறிவிட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, வழக்குப் பதிவு செய்ததைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மல்லையாவுக்கு எதிராக மத்திய பாஜக அரசோ, சி.பி.ஐ. அமைப்போ மேற்கொள்ளவில்லை' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து