முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன், பண மோசடி செய்து விட்டு இந்தியாவில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு, லண்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையா, அடுத்த 14 நாட்களுக்குள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லண்டன் நீதிமன்ற தீர்ப்புக்கு சி.பி.ஐ வரவேற்பு தெரிவித்துள்ளது. மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகளும், சி.பி.ஐ அதிகாரிகளும் லண்டனில் முகாமிட்டுள்ளனர்.

மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளித்த தீர்ப்பும், மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவும் லண்டன் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மல்லையா மேல்முறையீடு செய்யாவிட்டால், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். இந்த தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமைந்தாலும், பிரிட்டன் சட்ட விதிகளின்படி மல்லையாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர முடியாது என தெரியவந்துள்ளது.

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரும் பட்சத்தில் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. ஆனால், சிறையில் போதுமான வசதிகள் இல்லை என்ற சூழலில் மல்லையாவுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக அவரது தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையே அடிப்படையாகக் கொண்டு தன்னை நாடு கடத்தக் கூடாது என்றும் மல்லையா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மல்லையாவை அடைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிறை அறை குறித்த விடியோ பதிவை நீதிபதியின் உத்தரவின் பேரில் இந்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதே சமயம், மல்லையா மீது குற்றம்சாட்டுவதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதால் அவரை நாடு கடத்துவதில் சட்ட ரீதியாக தடை ஏற்படாது என்றும் கருதப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த பவானி ரெட்டி என்ற சட்டத்துறை நிபுணர் இதுகுறித்து கூறுகையில், அனைத்து நடைமுறைகளும் நீதிபதிக்கு திருப்தி அளிக்கும் விதமாக இருந்தால், மல்லையாவை நாடு கடத்துவதற்கு சட்ட ரீதியான தடைகள் இருக்காது. மல்லையாவை நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்குமாறு பிரிட்டன் உள்துறை அமைச்சருக்கு நீதிபதி பரிந்துரை செய்தாக வேண்டும் என்று தெரிவித்தார்.

மல்லையாவை நாடு கடத்துமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், உள்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்ததும், அதிலிருந்து 14 தினங்களுக்குள் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்வார். ஒருவேளை நாடு மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது மேல்முறையீட்டிலும் அது உறுதி செய்யப்பட்டாலோ, அன்றைய தினத்தில் இருந்து 28 நாட்களுக்குள்ளாக குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் நாடு கடத்தப்பட வேண்டும் என்பது பிரிட்டன் சட்ட விதிகளின்படி கட்டாயமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து