முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத்தமிழ்சங்க வளாகத்தில் கலை நாள் விழா அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை,- உலகத்தமிழ்சங்க வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில்  நடைபெற்ற மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நாள் விழாவில்   தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி பேருரையாற்றினார்.
 இவ்விழாவில்   தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்   தெரிவிக்கையில்:
 திரும்பிய திசையெல்லாம் முத்திரை பதித்து வருகிறது கலைப்பண்பாட்டுத்துறை. 27 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த துறை இதே நாளில் உருவாக முழு முதல் காரணமாக இருந்தவர் மறைந்த   தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களாகும். டிசம்பர் 23ம் தேதி கலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த முறை அரசு இசைப்பள்ளிகளை வைத்து இந்த கலை நாள் விழா கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கலைவிழாவில் நமது இசை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் இசைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பலதுறைகளிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த கலைப்பண்பாட்டுத்துறை.
தமிழ்வளர்ச்சி, கலைப்பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல், கைவிணைத்துறை ஆகிய ஐந்து துறைகளை இணைத்து ஒருங்கிணைந்த பண்பாட்டுத்துறை வெகுவிரைவில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும். இதற்கான அடிப்படை வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகத்தில் நமது பழங்கால இசைகருவிகள் இடம்பெற்றுள்ள ஒரு அரங்கு கலைப்பண்பாட்டுத்துறையினராக அமைக்கப்பட்டுள்ளது. இது மேலும் இத்துறைக்கு சிறப்பாகும்.   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைப்பண்பாடு, தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறைக்கென ரூ.227 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள்.
இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் ஆர்வத்தினை பெருக்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.400 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இந்த துறையின் அமைச்சராக பெறுப்பேற்றவுடன் 10 திட்டங்களை அறிவித்தேன். அதில் முக்கியமானது நமது இசைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதென்று. அதன்படி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒரு இசை ஆசிரியர் மற்றும் ஒரு நாட்டிய ஆசிரியர் நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
சென்னை மயிலாப்பூரில் ஜவஹர் சிறுவர் பந்த் திட்டத்திற்;கென தலைமை கட்டிடம் ஒன்று உருவாகவுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவஹர் சிறுவர் பந்த் திட்டம் தனித்து இயங்காமல் இசை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் சேர்ந்து இயங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் உங்கள் வலிமை முன்னேறும். இசை நகரம் என்று சென்னைக்கு அங்கீகாரம் கிடைத்தது உங்களுடைய முயற்சியால்தான். யுனோஸ்கோ மூலம் ரூ.5 கோடி மதிப்பிலான கூட்டரங்கம் கட்ட நிதி கிடைத்துள்ளது. இசை பல்கலைக்கழகத்திற்கு என புது இடம் சோழிங்கநல்லூர் தொழில்நுட்ப பூங்கா மத்தியில் தமிழக அரசால் வழங்கப்பட்டு அதில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் கலைமாமணி விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல்   முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்படும்.
இசைப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் சிவன் கோயில்களில் எப்படி ஓதுவார்கள் உள்ளனரோ அதேபோல் தனியார் பங்களிப்புடன் நமது ஊர்களில் உள்ள பெருமாள் கோயில்களில் நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் பாட வைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இசைப்பள்ளிகளில் பயிலும் 1000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இசைப்பள்ளிகள் அனைத்தையும் திறன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் சமுதாயக் கல்லூரிகள் போல மாற்றுவதற்கு முயற்சி எடுத்து செயல்படுத்த உள்ளோம். கும்பகோணம் கவின் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 10 கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இசை கருவிகள் அல்லது நடனக்கருவிகள் வாங்குவதற்கு தலா ரூ10,000 நிதி ஒதுக்கி 320 கலைஞர்களுக்கு ரூ.3,20,000 மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டுவிடும். கலைக்குழுவிற்கு ஆண்டிற்கு ரூ.1 கோடி என ஒதுக்கப்பட்டுள்ள நிதி தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற வாரம் காமராஜர் அரங்கத்தில் வைத்து   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மெல்லிசை கலைஞர்கள் குழுவிற்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். முக்கியமாக நமது மாநிலத்தில் உள்ள அனைத்து நினைவகங்களிலும் செய்தித்துறையின் மூலம் லைவ் மியூசிக் இசைப்பதற்கு நிரந்தர கலைஞர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் நினைவில்லத்தில் இந்த லைவ்p மியூசிக் அமலுக்கு வந்துள்ளது. கலை உலகிற்கு பெருமை சேர்க்கின்ற மாவட்டகளாக தஞ்சாவூர் மற்றும் மதுரை திகழ்கிறது என தெரிவித்தார்.
  இவ்விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.இராஜன்செல்லப்பா   உள்ளிட்ட கலைஞர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து