முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்: தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் - புதிய அறிவிப்புகள் - திட்டங்கள் வெளியாக வாய்ப்பு

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் உரை...

தமிழக சட்டசபையின் கூட்டம் கடந்த 2-ம் தேதி கூடியது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த உரையில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ,1,000 வழங்கப்பட்டது. கவர்னர் உரைக்கு மறுநாள் 3ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கவர்னர் உரை மீதான விவாதம், ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.

பட்ஜெட் தாக்கல்...

இதைத்தொடர்ந்து 15வது தமிழக சட்டசபையின் ஆறாவது கூட்டம் இன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையிலான அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பட்ஜெட் உரை மீதான கூட்ட்ததொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அனேகமாக நான்கு அல்லது ஐந்து நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நலத்திட்டங்கள்...

வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, ஆகியோரின் பாதையை பின்பற்றி ஆதிதிராவிடர், பழங்குடியினர், நெசவாளர்கள், மீனவர்கள் விவசாயிகள் என்று அனைத்து தரப்பையினரின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்கள் இடம் பெற்றிருக்கும் என்று ஏற்கனவே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2-வது முறையாக...

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 8-ம் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை-9, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத்தலைவர் கூட்டியுள்ளார். மேலும், இன்று காலை 10.00 மணிக்கு 2019-2020-ம் ஆண்டிற்கான நிதிநிலைஅறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து