தமிழகத்தின் ஒப்புதலின்றி கேரளா புதிய அணை கட்டக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      இந்தியா
Mullai-Periyar 2019 02 12

புதுடெல்லி : தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்  தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் தமிழக அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு,  சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, கே.வி. விஜயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்காமல் புதிய அணையை கட்டும் திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு முன்வைத்துள்ளது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையும் கேரளா அரசு கருத்தில் கொள்ளவில்லை. மேலும் 2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவின் 84 -வது கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த திட்டமாக இருந்தாலும், அது இரு மாநிலங்களின் ஒப்புதலுக்கு பிறகே பரிசீலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.ஆனால் கேரளா அரசு இந்த நிபந்தனையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மதிக்காமல் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரி உள்ளது. மத்திய அரசும் இந்த ஆய்வு தொடர்பாக அனுமதி வழங்கி உள்ளது. இது முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் ஒப்புதல் இன்றியோ, சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இன்றியோ புதிய அணையை கேரளா கட்டக்கூடாது என்று கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து