முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி உறுதியானது : அ.தி.மு.க.வுடன் பா.ம.க. - பா.ஜ.க. தேர்தல் கூட்டணி - பா.ம.க.வுக்கு 7 - பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு - முதல்வர் - துணை முதல்வர் முன்னிலையில் உடன்பாடு கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில்  பா.ம.க.வும், பா.ஜ.க.வும் இணைந்துள்ளன. இக்கூட்டணியில் பா.ம.க.வுக்கு  7 தொகுதிகளும், பாரதிய ஜனதாவுக்கு 5 நாடாளுமன்ற தொகுதிகளும்  ஒதுக்கப்பட்டுள்ளன.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி என்று பா.ம.க.நிறுவனர் ராமதாசும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

துணை முதல்வர் தகவல்

நடப்பு பாராளுமன்றத்தின் பதவிகாலம் முடியவிருப்பதால் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. வெகு விரைவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்  தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடிக்க தொடங்கியது. எந்த கட்சி யாருடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட தொடங்கியது. இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை தேசிய,மாநில கட்சிகளுடன்  நடந்து வருவதாகவும் ஒரிரு நாளில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார். இந்நிலையில் நேற்று பேச்சுவார்த்தைக்குப்பிறகு அ.தி.மு.க.வுடன் பா.ம.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் கூட்டணியில் இணைந்தன. இது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி ஒப்பந்தம்

முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுண் பிளாசா ஓட்டலுக்கு நேற்று காலை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும்  அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி  ஆகியோரும் வந்தனர்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார். பின்னர், அவர்களுடன் அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு  இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொகுதிகள் பின்னர்...

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி, பா.ம.க. 7 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும். மேலும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும். பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுநடத்துவதற்காக  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார். ஆனால் சென்னை வருவதாக இருந்த பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா நேற்று வரவில்லை. அவருக்கு பதில் தமிழக பா.ஜ.க.தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் வந்தார். அவருடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில்  கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் முடிவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வுக்கு 5 இடங்களை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூட்டாக பேட்டி...

பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது அ.தி.மு.க. இதையடுத்து இரு கட்சி தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது,

அ.தி.மு,க - பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தமிழகம்- புதுச்சேரியில் போட்டியிட  முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என கூறினார்.

நாற்பதும் நமதே...

இதையடுத்து தமிழக பா.ஜ.க.பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க. தலைமையில் கூட்டணியாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். இந்த கூட்டணி குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவார். அவரது கனவை நிறைவேற்ற உழைப்போம் என்று தெரிவித்தார். அ.தி.மு.க.வுடன் பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்திருப்பது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது தேர்தல் அறிவிப்பு வந்தாலும் கூட்டணி குறித்த அறிவிப்பை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் முதலில் வெளியிடுவார். அதேபோல், அம்மா வழியில் நடக்கும் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க அரசும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து