முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தீவிர பரிசோதனை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -  இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடுமையான பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனையின் போதும், ஸ்டார் ஹோட்டல்களிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டு அடுத்தடுத்து வெடித்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் கடல் வழியாகவோ, வான் வழியாகவோ தப்பித்து தமிழகத்தில் நுழைந்து விடாதபடி தீவிர கண்காணிப்புப் பணியில் கடலோரக் காவல் படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். குறிப்பாக ரயில் நிலையங்கள், பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் சந்தேகப்படும்படியான நபர்கள் உலவுகின்றனரா? என்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பழனி கோவிலில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி கோவிலுக்கு வருடந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதுண்டு. தற்போது தொடர் விடுமுறை என்பதால் பழனி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பழனி கோவிலுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்தபிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கொண்டும் பக்தர்கள் சோதனை நடத்தினர். பஸ் நிலையம், ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாயும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. சந்தேகப்படும்படியான நபர்கள் உலவுகின்றனரா? என்று கண்காணிப்பு கேமரா மூலம் சோதனை நடத்தப்பட்டது. பழனி கோவிலில் போலீசார் நடத்திய இந்த சோதனை பக்தர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து