அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், டெல்லியில் ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு: ராஜினாமா கடிதம் கொடுத்தார்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
modi-ramnath kovind 2019 05 24

புது டெல்லி, 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நேற்று ஜனாதிபதி மாளிகை சென்ற பிரதமர் மோடி அங்கு ஜனாதிபதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். 16-வது மக்களவையை கலைத்து விட்டு 17-வது மக்களவையை ஏற்படுத்தவும் அப்போது அவர் வலியுறுத்தினார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.
அமைச்சரவை கூட்டம்...
 
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அமைச்சரவை மற்றும் மக்களவையை முடிவுக்கு வருவது குறித்து அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது 16-வது மக்களவையை கலைத்து விட்டு 17-வது மக்களவையை ஏற்படுத்துவது குறித்து அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவர் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி கொடுத்தார்.
ஜனாதிபதியிடம்...
 
அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மாற்று ஏற்பாடுகள் நடக்கும் வரை பதவியில் நீடிக்கும் படி கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, 16-வது மக்களவையை கலைத்து விட்டு 17-வது மக்களவையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அவரிடம் வழங்கினார். மேலும் புதிய அமைச்சரவை குறித்தும் இருவரும் அப்போது விவாதித்தனர். நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து அப்போது பேசப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலையில் டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. அப்போது புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்கவும் மோடி முடிவு செய்திருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து