5-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பட்நாயக் 29-ல் பதவியேற்பு

சனிக்கிழமை, 25 மே 2019      இந்தியா
Naveen Patnaik 2019 05 23

புவனேஸ்வர் : ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நவீன் பட்நாயக் வரும் 29-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.

112 தொகுதிகளில்...

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.

எம்.எல்.ஏ.க்கள்...

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29-ம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5-வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜூ ஜனதா தளம் தலைமை தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார்.

12 இடங்களி்ல்...

சட்டமன்ற தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து