குஜராத் 4 மாடி கட்டிட தீவிபத்தில் 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
businessman saved students 2019 05 26

சூரத் : குஜராத் 4 மாடி கட்டிட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை வியாபாரி ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் தக்ஷீலா காம்ப்ளக்ஸ் என்ற 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பயிற்சி வகுப்பில் இருந்த 23 மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். கட்டிடத்தில் ஏற்பட்ட தீ கொளுந்து விட்டு எரிந்ததால் மாணவர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். சிலர் ஜன்னல் மீது அமர்ந்தபடி உதவி கேட்டு அலறினார்கள்.

தீ விபத்தின் போது கேதன் ஜோர்வத்யா என்ற வியாபாரி 8 மாணவர்களின் உயிரை காப்பாற்றினார். தீ விபத்து நடந்த கட்டிடம் அருகே கேதன் ஜோர்வத்யா வசித்து வருகிறார். அவர் தீ விபத்தை பற்றி அறிந்ததும் வீட்டில் இருந்து ஓடி சென்றார். கட்டிடத்தில் இருந்து மாணவர்கள் கீழே குதிப்பதை பார்த்தார். உடனே கேதன் ஏணி மூலம் ஏறி 2-வது மாடியின் பக்கவாட்டில் நின்று கொண்டார். ஜன்னல் வழியாக குதித்தும் மாணவிகளை பிடித்து பத்திரமாக நிற்க வைத்தார். பின்னர் அவர்களை ஏணி மூலம் கீழே இறக்கினார்.இது போன்று அவர் 8 மாணவர்களின் உயிரை காப்பாற்றினார். தன் உயிரை பணயம் வைத்து 8 பேரை காப்பாற்றிய கேதன் ஜோர்வத்யாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து