கைதிகளை நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு : மக்களின் போராட்டத்தால் குலுங்கியது ஹாங்காங்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      உலகம்
Hong Kong struggle 2019 06 10

ஹாங்காங் : கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர்.

ஹாங்காங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹாங்காங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.  கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இது தொடர்பாக ஹாங்காங் சட்டசபையில் கடந்த மாதம் விவாதம் நடந்த போது வன்முறை தாண்டவமாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆனால் சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். 12-ம் தேதி இது ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது.

இந்த நிலையில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வந்து வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர். வெள்ளை நிற உடை அணிந்து வர்த்தகர்கள், வக்கீல்கள், மாணவர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், மத குழுவினர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். அவர்கள் உத்தேச சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தனர். இந்த போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து