முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது: ஐகோர்ட் கிளை

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சி.பி.சி.ஐ.டி. விசாரணை இறுதி கட்டத்தை அடைந்ததால் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். நிர்மலாதேவி வழக்கில் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதோடு வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடையும் விதித்திருந்தது.

இந்த நிலையில் நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சி.பி.சி.ஐ.டி. விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. மேலும், சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். நிர்மலாதேவி வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரணை செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து