முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் சொந்த ஊரில் தகனம் - கர்நாடக முதல்வர் எடியூரப்பா அஞ்சலி

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

மங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தொழில் அதிபர் சித்தார்த்தாவின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபர் சித்தார்த்தா. முன்னாள் முதல்வர்  எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான இவர் கபே காபி டே எனும் பிரபலமான ஓட்டல்களை நடத்தி வந்தார். அதோடு தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்களையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி காரில் தனது டிரைவர் பசவராஜுடன், சித்தார்த்தா மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் சென்ற போது காரை நிறுத்தி இறங்கி சென்ற சித்தார்த்தா அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தாதின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சித்தார்த்தா மாயமாகி விட்டதாக டிரைவர் பசவராஜ் கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், சித்தார்த்தா மாயமானதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், கடலோர காவல் படை குழுமத்தினர், ஊர்க்காவல் படையினர், மீனவர்கள் என பலரும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் மங்களூரு அருகே ஒய்கை பஜார் பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த்தா பிணமாக கரை ஒதுங்கினார். இதனை பார்த்த மீனவர்கள் கங்கனாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் சித்தார்த்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து தொழில் அதிபர் சித்தார்த்தாவின் உடல், நேரடியாக சிக்கமகளூரு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு அவருக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் மூடிகெரே தாலுகா சீக்கேனஹள்ளி கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான சேதனஹள்ளி காபி எஸ்டேட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சித்தார்த்தாவின் மறைவையொட்டி அவருக்கு சொந்தமாக சிக்கமகளூரு, ஹாசன், குடகு மாவட்டம் மடிகேரி ஆகிய பகுதிகளில் உள்ள காபி நிறுவனங்கள் மற்றும் எஸ்டேட்கள் மூடப்பட்டன. அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சித்தார்த்தாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல் சேதனஹள்ளி கிராமத்தில் உள்ள 2 காபி நிறுவனங்களும் மூடப்பட்டன.

இதற்கிடையே முதல்வர் எடியூரப்பா தனி ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூருவுக்கு வந்தார். சிக்கமகளூரு தனியார் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் சேதனஹள்ளி எஸ்டேட்டுக்கு சென்றார். பின்னர் அவர் சித்தார்த்தாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் மற்றும் பா.ஜ.க. வை சிலர் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் சித்தார்த்தாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் சித்தார்த்தாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சட்டனஹள்ளி அருகே சேதனஹள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து