முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரம்: மத்தியஸ்தம் செய்ய தயார் என மீண்டும் சொல்கிறார் டிரம்ப்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பிரான்சில் நடைபெறும் ஜி-7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை திசை திருப்ப முயன்றது. இதனையடுத்து சீனாவின் உதவியோடு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் அரசாங்கம் முறையிட்டது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர உறுப்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காததால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் ஜி - 7 நாடுகளின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் இதில் பங்கேற்கின்றன. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டிற்கு நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு சமரசம் செய்ய விரும்புவதாக அதிபர் டிரம்ப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை மிகவும் சிக்கலானது என்றும் நீண்ட காலமாகவே இந்து - முஸ்லிம் பிரச்சினை இந்தியாவில் இருப்பதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரிடமும் தாம் தொலைபேசியில் பேசியதாகவும் இருவரும் சிறந்த மனிதர்கள், தமக்கு நல்ல நண்பர்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து