முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களை இணைத்து கோதாவரி - காவேரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுடன் ஒன்றாக இணைந்து நிறைவேற்ற. மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

செ ன்னை, கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் எப்பொழுது தொடங்கும்?
பதில்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தப் பணி நிறைவு பெற்றவுடன் 400 எம்.எல்.டி. பேரூரில் உருவாக்குவதற்கு அரசால் உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலம் சுமார் 876 எம்.எல்.டி. நீர் சென்னை மாநகரமக்களின் குடிநீர்ப் பிரச்னையை போக்குவதற்கு வழங்கப்படும்.
கேள்வி: முன்னாள் முதல்வர் வீராணம் திட்டம் கொண்டு வந்தது போல், உங்களுடைய அரசாங்கம் எதுபோன்ற திட்டங்களை வைத்திருக்கின்றீர்கள்?
பதில்: நிறைய திட்டங்களை தெரிவித்திருக்கின்றோம். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், பருவ மழை பொய்தாலும், இயற்கை பொய்தாலும், 876 எம்.எல்.டி. குடிநீர் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல்,கிருஷ்ணா நதி திறக்கப்படுகின்ற பொது, கண்டலேறிலிருந்து நீர் வருகிற போது பைப் லைன் மூலம் ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் முழுவதும் பூண்டி ஏரிக்கு வந்தடையும் பொழுது நமக்கு அதிகளவில் நீர் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. அதனையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
கேள்வி: கிருஷ்ணா நதிநீரை பைப்லைன் மூலம் கொண்டு வருவோம் என்று சொல்கிறீர்கள் ஆனால், பாலாற்றில் தடுப்பணைகளை உயர்த்திக் கொண்டு வருகிறார்கள் என்ற பிரச்னை இருக்கிறதே?
பதில்: ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை மீறி அவர்கள் தடுப்பணையை உயர்த்துகின்றார்கள். தடுப்பணையை உயர்த்தக் கூடாது, புதிய தடுப்பணை கட்டக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கின்றது. வழக்கு வருகின்ற பொழுது,அதற்கு தீர்வு காணப்படும்.
கேள்வி: அண்டை மாநிலங்களுடன் இணக்கமாக இருக்கும் ஒரு நடவடிக்கையாகத் தான் கேரள முதலமைச்சரை நீங்கள் சந்தித்தீர்கள், அதே போல் ஆந்திர முதலமைச்சரையும் சந்திப்பீர்களா?
பதில்: அண்டை மாநிலங்களோடு சுமுகமான உறவு இருக்கின்ற விதமாகத்தான் கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்காகக் கூட உள்ளாட்சித் துறை அமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும் நேரடியாகச் சென்று ஆந்திர முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தவுடன், உடனடியாக, சென்னை மாநகரமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து, அதற்கான நடவடிக்கையை எடுத்து தண்ணீர் திறக்கப்பட்டு, கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கேள்வி: நாம் கோதாவரி நீர் பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா?
பதில்: மத்திய அரசு இந்தத் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறது. கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டம் என்பது தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுடன் ஒன்றாக இணைந்து இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசால் அதற்குத்தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களால் அவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று நாமும் தெரிவித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் ஒன்றாகச் சேர்ந்து கோதாவரி -காவேரிஇணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து