முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 15-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.-க்கு ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான அறிக்கையை வரும் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் தீரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள 207 இடங்களையும் தமிழக அரசு அந்தந்த தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்களிடம் ஒப்படைத்து விட்டது. எனவே இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி தகுதியானவர்களை கொண்டு அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கானது முன்னர் விசாரணைக்கு வந்த போது, நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக சில கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதுவரை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 2 மாணவர்கள் நீட் ஆள்மாறாட்ட முறகேட்டில் சிக்கியுள்ளனர். அது தவிர நிகர்நிலை பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3 மாணவர்களும் சிக்கியுள்ளனர் என்ற தகவலை தெரிவித்தனர். மேலும், இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் இவ்வழக்கில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருக்கையில் ஒரே ஒரு இடைத்தரகர் மட்டுமே சிக்கியுள்ளார் என்பதை நம்ப முடியவில்லை. இதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என கூறினர்.

அதுமட்டுமல்லாது, அதிகாரிகள் துணையில்லாமல் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆள்மாறாட்டத்தில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர் ? எவ்வளவு பணம் கைமாறியுள்ளது? ஆள்மாறாட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், கல்லூரி ஊழியர்கள் யார் யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, இவ்வழக்கில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தமிழக அரசின் சுகாதாரத்துறை, தமிழக டி.ஜி.பி. மற்றும் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆகிய 4 பேரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், இவ்வழக்கு குறித்து இவர்கள் நால்வரும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, நீட் ஆள்மாறாட்டம் விவகாரம் தொடர்பான அறிக்கையை வரும் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து