முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணையில் இருந்து 9-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணையில் இருந்து வரும் 9-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன நிலங்களுக்கும்  திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். இதன்படி, பெரியாறு வைகை பாசனத்திற்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பாசன பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு 9.10.2019 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.  இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து