முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் ஹாகிபிஸ் புயல்: 70 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேற எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பானில் ஹாகிபிஸ் புயல் கடுமையான வேகத்தோடு தாக்கி வருவதால் பேரழிவுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், 70 லட்சம் பேரை வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான அளவில் ஹாகிபிஸ் புயல் தாக்கி வருகிறது என்றும், டோக்கியோவின் தென்மேற்கே உள்ள இசு தீபகற்பத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முன்னதாக மாபெரும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது என்றும் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை ஜப்பானில் சிபா கென் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியது. ஜப்பானில் கோர தாண்டவம் ஆடிவரும் ஹாகிபிஸ் சூறாவளி, ஜப்பானின் பிரதான தீவின் கிழக்கு கடற்கரைக்கு 225 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. 270,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இழந்து விட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா மாகாணத்தில் அதிக காற்றுடன் வாகனம் கவிழ்ந்து இரண்டு பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கைகளுக்கு மத்தியில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் 50,000 பேர் மட்டுமே தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வுமையத்தின் முன்னறிவிப்பாளர் யசுஷி கஜிவாரா செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:-

அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்ட நகரங்கள், கிராமங்களில் வரலாறு காணாத வகையில் கடுமையான மழை பெய்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்கனவே நிகழ்ந்திருக்க வாய்ப்பு மிக அதிகம். உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு கடுமையான சூறாவளியில் அப்பகுதி சிக்கியுள்ளது. என்றாலும் உங்கள் உயிரைக் காப்பாற்ற உதவும் வகையில் நடவடிக்கை எடுப்பது முக்கியம். இவ்வாறு ஜப்பான் வானிலை ஆய்வுமைய முன்னறிவிப்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து