முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

31-வது பிறந்த நாள் : தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்ட விராட்கோலி

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : 31-வது பிறந்த நாள் கொண்டாடி வரும் விராட் கோலி தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்டு உள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்த நாளை மனைவி அனுஷ்காவுடன் பூடானில் உற்சாகமாக கொண்டாடினார். மனைவி அனுஷ்கா சர்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பூடானில் உள்ள புனிததலங்களை எனது மனைவி அனுஷ்காவுடன் சென்று ரசித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். என் இதயம் நிறைந்த நன்றியை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளையொட்டி விராட்கோலி  தன்னுடைய இள வயது கோலிக்குப் பதிவொன்றை எழுதியுள்ளார். அவர் தனக்கு தானே எழுதிய பதிவில் கூறி இருப்பதாவது:-

முதலில் உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். உன் எதிர்காலம் குறித்து என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன என எனக்குத் தெரியும். என்னை மன்னித்து விடு. பல கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கப் போவதில்லை.  அடுத்து என்ன நடக்கப் போவது என்பது தெரியாமல் இருக்கும் போது ஒவ்வொரு சவாலில் இருந்தும் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், சேருமிடத்தை விடவும் பயணமே முக்கியம். விராட், வாழ்க்கையில் உனக்கு அபார விஷயங்கள் காத்திருக்கின்றன. உன் வழியில் வரும் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும். உனக்குக் கிடைக்கும் எதையும் அலட்சியமாக எண்ணாதே. எல்லோரையும் போல நீயும் தோல்வியடைவாய். ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் எழுவேன் என உறுதி கொள். முதல் முறை முடியாமல் போனாலும் தொடர்ந்து முயற்சி செய். உன்னைப் பலர் விரும்புவார்கள், பலர் வெறுப்பார்கள். உன்னைப் பற்றித் தெரியாதவர்களும் வெறுப்பார்கள். அவர்களைக் கணக்கில்  எடுத்துக் கொள்ளாதே. உன் மீது நம்பிக்கை வை. உன் பிறந்தநாளுக்குத் தந்தை பரிசளிக்காத ஷூவைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பாய் என எனக்குத் தெரியும். உன் உயரம் குறித்து அவர் அடித்த நகைச்சுவை, இன்று காலை உன்னைக் கட்டிப் பிடித்தது ஆகியவற்றுக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமில்லை. இதைக் கொண்டாடு. சில நேரங்களில் அவர் கண்டிப்பாக இருப்பார் என எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் உன்னிடமிருந்து சிறந்த செயல்களையே விரும்புகிறார். நம் பெற்றோர் நம்மைச் சில நேரங்களில் புரிந்து கொள்வதில்லை என நீ எண்ணுவாய். ஒன்றைப் புரிந்துகொள் - நம் குடும்பத்தினர் மட்டுமே நம் மீது எல்லையில்லா அன்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களை நீயும் விரும்பு. மரியாதை கொடு. உன் நேரத்தை அவர்களுடன் செலவிடு. உன் தந்தையிடம் நீ அவரை விரும்புவதாகக் கூறு. இன்று இதைச் சொல். நாளையும் சொல். அடிக்கடி சொல்.கடைசியாக, உன் மனம் என்ன சொல்கிறதோ அதற்கேற்றபடி உன் கனவை நோக்கிச் செல். அன்பாக இரு. பெரிதாகக் கனவு காண்பது எத்தகைய  மாற்றங்களை உருவாக்கும் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்து. நீ நீயாக இரு அந்தப் பரோட்டாக்களை அனுபவித்துச் சாப்பிடு. வருங்காலங்களில் அது பெரிய விஷயமாக இருக்கும், ஒவ்வொரு நாளையும் சிறப்பாக்கு என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து