முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்- 4 தேர்வு முறைகேடு; போலீசாரால் தேடப்பட்ட இடைத்தரகர் ஜெயகுமார் சரண் - 14 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவருக்கு 14 நாள் நீதிமன்றக்காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம் கொடுத்து வெற்றி  பெற்றது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. கொடுத்த புகாரின்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் இரண்டு வழக்குகளையும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக ஜெயகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் சித்தாண்டியை சி.பி.சி.ஐ.டி. அறிவித்தது.

இருவரும் தேர்வு எழுதும் நபர்களிடம் குரூப் 4 தேர்வுக்கு ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும், குரூப் 2ஏ தேர்வுக்கு ரூ. 8 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் வசூலித்து முறைகேடாக பணம் கொடுத்த நபர்களை வெற்றி பெற செய்துள்ளனர்.

குறிப்பாக குரூப் 2ஏ தேர்வில் சித்தாண்டி தனது மனைவி சண்முகபிரியாவை தமிழக அளவில் 5-வது இடத்திலும், தனது சகோதரன் வேல்முருகனை 3-வது  இடத்திலும், வேல்முருகன் மனைவியை 6-வது இடத்திலும், இளைய சகோதரன் கார்த்தியை குரூப் 4 தேர்வில் 10 -வது இடத்திலும் வெற்றி பெற வைத்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்திய போது தான் சித்தாண்டிக்கு இந்த மோசடியில் முக்கிய  பங்கு இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சித்தாண்டி மற்றும் ஜெயகுமார் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விவகாரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு  தெரிந்ததும் சித்தாண்டி தனது மனைவி சண்முகபிரியாவுடன் தலைமறைவாகி விட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் குரூப் 2ஏ தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற சித்தாண்டியின் சகோதரன் வேல்முருகனை கடந்த 29-ம் தேதி காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் சித்தாண்டியின்  முழு மோசடி விபரங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரியவந்தது. இளையான்குடி அருகே சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக சித்தாண்டியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவருக்கு வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து