துணை நிலை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்: 3-வது முறையாக டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார் -6 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      இந்தியா
arvind kejariwal 2020 02 16

Source: provided

புது டெல்லி : டெல்லி மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று 3-வது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

 

டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க.வுக்கு 8 இடங்கள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக நேற்று பதவி ஏற்றார்.

இதற்கு முன் இருந்த முதல்வர்கள் எல்லாம் டெல்லி ராஜ் நிவாஸில் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்திய நிலையில் ராம் லீலா மைதானத்தில் முதல்முறையாக கெஜ்ரிவால் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கெஜ்ரிவாலுடன் சேர்ந்து 6 பேர் கேபினெட் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கெலாட், இம்ரான் ஹூசைன், ராஜேந்திர பால் கவுதம் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். பல்வேறு தரப்பட்ட மக்கள் 50 பேரை சிறப்பு விருந்தினர்களாக ஆம் ஆத்மி கட்சி பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்திருந்தது. இவர்கள் அனைவரும் மேடையில் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.

பதவி ஏற்பு விழா பாதுகாப்புக்காக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணியும் நடந்தன. 125 கண்காணிப்பு கேமிராக்கள், 12 எல்.சி.டி. தொலைக்காட்சிகள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்தன. ஏறக்குறைய 45 ஆயிரம் பேர் அமரும் வகையில் ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க ஒன்றரை வயதுக் குழந்தையை கெஜ்ரிவால் போன்று தலையில் மப்ளர் அணிந்து, மீசை வரைந்து சிறிய கண்ணாடி அணிவித்து அழைத்து வந்திருந்தனர். அவ்யன் தோமர் என்ற பெயர் கொண்ட அந்தக் குழந்தை சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆம்ஆத்மி தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் குழந்தையுடன் பெற்றோர் காத்திருந்தும் முதல்வர் கெஜ்ரிவால் வரவில்லை. இதனால், கெஜ்ரிவாலைச் சந்திக்க முடியாமல் குழந்தையின் பெற்றோர் வீடு திரும்பினர்.

கெஜ்ரிவால் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு பேபி மப்ளர் மேன் அவ்யன் தோமரை சிறப்பு விருந்தினராக ஆம் ஆத்மி கட்சி அழைத்திருந்தது. குழந்தை தோமரின் செயல் அனைவரையும் ரசிக்க வைத்தது. பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை ஆம் ஆத்மி கட்சி அழைத்திருந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து