மலேசிய அரண்மனையில் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: தனிமைப்படுத்தப்பட்ட மன்னரும், ராணியும்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      உலகம்
Malaysia king  queen 2020 03-26

மலேசிய அரண்மனையில் 7 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் மன்னரும், ராணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மலேசிய அரண்மனை தரப்பில் கூறப்படுவதாவது,

அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு கோவிட் தொற்று ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா மற்றும் மலேசிய ராணி துன்கு அஜிசா அமினா மைமுனாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 காய்சலுக்கு மலேசியாவில் சுமார் 1,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது. சீனாவின் வுகான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து