முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து சிவகாசியில் இன்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இதையடுத்து நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த அவர் நேற்று மாலை தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து விட்டு அங்கிருந்து கார் மூலம் எடப்பாடி பழனிசாமி சிவகாசிக்கு செல்கிறார். 

தொடர்ந்து சிவகாசியில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு தங்கும் அவர் இன்று காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார். 

இதையடுத்து மாலை 5 மணிக்கு சிவகாசி பாவடி தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அதனைத் தொடர்ந்து கார் மூலம் மதுரை செல்கிறார்.

எடப்பாடி பழனிசாமி சிவகாசிக்கு பிரச்சாரம் செய்ய வருவதையொட்டி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து