சுரங்க தொழிலில் மாவோயிஸ்டு உதவியுடன் தாவூத்

ராய்ப்பூர், மார்ச்.13 - சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்டு மாநிலங்களில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கனிம வளங்களை குறிவைத்து மாவோயிஸ்டுகளுடன் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் கைகோர்த்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் இருந்து கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கான அனுமதி குறித்த பேச்சுவாத்தை நடந்து வருவதாகவும், ரூ. 4 ஆயிரம் கோடியை முதல் கட்டமாக தாவூத் இறக்கி விடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டவிரோத தொழில் மற்றும் பல்வேறு ரகசிய தொழில்கள் மூலமாக தாவூத்தின் சொத்து மதிப்பு ரூ. 12 ஆயிரம் கோடியை தாண்டியிருக்கும் என்று பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை அள்ளித்தரும் சட்டவிரோத சுரங்க தொழிலில் தாவூத் மாவோயிஸ்டுகள் உதவியுடன் இறங்கியிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே அண்மைக்காலமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில் மூலமாக மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை பெற்று வருவது தெரியவந்துள்ளது.