முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்தகாருக்கு விமானம் கடத்தல்: தீவிரவாதி கைது

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப். 14 - பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை நேபாளத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகருக்குக் கடத்தியவர்களுக்கு உதவிகள் செய்த மெஹ்ராஜூதீன் தண்ட் என்ற தீவிரவாதியை ஜம்மு-காஷ்மீர் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ்ஈடுபட்டு வரும் தண்ட், நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்புகளிலும் தொடர்புடையவன் ஆவான். கடந்த பல ஆண்டுகளாக நேபாளத்தில் வாழ்ந்து வந்த தண்ட், கந்தகார் விமானக் கடத்தல்காரர்களுக்கு உதவிய முக்கிய நபர் ஆவான். இந்திய விமானத்தைக் கடத்திய 5 தீவிரவாதிகளுக்கும் தண்ட் தான், போலி ஆவணங்களைத் தயாரித்து நேபாளத்துக்கு பயணம் செய்ய உதவினான். இதையடுத்து இவனை மத்திய உளவுப் பிரிவுகள் தொடர்ந்து தேடி வந்தன.

1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நேபாளத்தில் இருந்து கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், இந்திய வான்வெளிக்குள் நுழைந்தவுடன் அதிலிருந்த 5 தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தினர்.

முதலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நிறுத்தி விமானத்தில் எரிபொருளை நிரப்ப வைத்த தீவிரவாதிகள், பின்னர் அதை லாகூரில் தரையிறக்கினர். இதையடுத்து துபாய்க்கு கொண்டு செல்லப்பட்ட அந்த விமானத்தில் இருந்த சில பயணிகளை விடுவித்த தீவிரவாதிகள், அதை ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகருக்குக் கொண்டு சென்றனர்.

முன்னதாக விமானத்தில் வைத்து ஒருவரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், அவரது உடலை லாகூர் விமான நிலையத்தில் வீசினர். கந்தகார் நகரில் அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களின் உதவியோடு கிட்டத்தட்ட ஒரு வாரம் தீவிரவாதிகள் பிடியில் இருந்தது அந்த விமானமும் பயணிகளும்.

இதையடுத்து தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று ஜெய்ஷ் ஏ முகம்மத் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார், அகமத் ஒமர் சயீத் சேக் மற்றும் இன்னொரு தீவிரவாதியை அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு விடுவித்தது.

தீவிரவாதிகளுடன் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் விமானத்திலேயே சென்று அவர்களை தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தையும் பயணிகளையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார். இந் நிலையில் இந்த விமானக் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து தேடப்பட்டு வந்த தண்ட் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சிக்கியுள்ளான்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினால் பயிற்சி அளிக்கப்பட்ட தண்ட், பின்னர் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவி வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்