முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்சய திருதி - நகை கடைகளில் கூட்டம்

சனிக்கிழமை, 7 மே 2011      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, மே. 7​- அட்சய திருதியையொட்டி சென்னையில் உள்ள நகைகடைகளில் நேற்று பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் திருதியை திதியை அட்சய திருதியையாக கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் நகை பெருகும் என்று பெண்கள் நம்புகிறார்கள். 

கடந்த சில வருடங்களாக அட்சய திருதியை நாளில் நகை வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அட்சய திருதியை நாளில் மட்டும் பல மடங்கு தங்கம் விற்பனை அதிகரித்தது. இந்த ஆண்டு அட்சய திருதியை நேற்று முன்தினம் மாலை வளர்பிறையில் தொடங்கியது. அட்சய திருதியை தொடங்கும் முன்பே நகை வாங்கும் ஆர்வம் பெண்களிடையே ஏற்பட்டது. இதனால் நகை கடைகளில் ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தனர். வாடிக்கையாளர்களை கவருவதற்காக நகைக் கடைக்காரர்கள் போட்டி போட்டு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருந்தனர். 

அட்சய திருதியை வியாபாரத்திற்காக நகைக் கடைகள் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. அதற்கு முன்பே பெண்கள் குடும்பத்துடன் வந்து காத்திருந்தனர். கடை திறக்கப்பட்டதும் போட்டி போட்டு நகை வாங்கினார்கள். இதனால் நகைக் கடைகளில் பெண்கள் கூட்டம் அலை மோதியது. பெண்கள் குடும்பத்துடன் நகை வாங்க வந்திருந்தனர். 

சென்னையில் நகைக் கடைகள் அதிகம் உள்ள தியாகராய நகர், பாரிமுனை, அண்ணாநகர், மைலாப்nullர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டு இருந்தது. அவை நிரம்பி வழிந்தது. காலை 9 மணி முதல் 10 மணிக்குள் முகூர்த்த நேரம் என்பதால் இந்த நேரத்தில் நகை வாங்க பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் மட்டுமல்லாது, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் போன்ற இடங்களில் இருந்தும் நகை வாங்க வந்திருந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களும் பெற்றோருடன் திருமண நகைகள் வாங்க வந்தார்கள். கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்து வரலாறு காணாத அளவுக்கு பவுன் ரூ. 16 ஆயிரத்து 500ஐ தாண்டியது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரிய அளவில் தங்கம் வாங்காவிட்டாலும், கம்மல், மோதிரம் போன்றவற்றை வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு இது போன்ற சிறிய பொருட்களின் விற்பனை அதிகம் இருந்தது. சிலர் நகையாக வாங்காமல்  தங்கக்காசுகளாக வாங்கிச் சென்றனர். தங்கம் விலை உயர்ந்தாலும் விற்பனை பாதிக்கப்படவில்லை. ஒவ்வொரு நகை கடையிலும் 30 கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனையானதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். நேற்றைய தினம் மட்டுமே 3 ஆயிரம் கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனையாகக்கூடும் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்