முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பினார்

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே.- 29 - பிரதமர் மன்மோகன் சிங் 6 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று புதுடெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் மன்மோகன் சிங்கிற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் 6 நாட்கள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளுக்கு சென்றார். முதலில் எத்தியோப்பியாவுக்கு 3 நாள் பயணமாக சென்ற பிரதமர் மன்மோகன் சிங் தலைநகர் அடீஷ் அபாபாவில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா-ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். மாநாட்டின் ஒரு நிகழ்ச்சியாக கனிம பொருள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். எத்தியோப்பியா பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார். அப்போது ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவி செய்யும் என்றார். கடல் கொள்ளை, தீவிரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மன்மோகன் சிங் வலியுறுத்தி கூறினார். இதுதொடர்பாக எத்தியோப்பியாவுடன் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டது. எத்தியோப்பியா நலத்திட்டங்களுக்கு சுமார் 13 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் அறிவித்தார்.
எத்தியோப்பியா பயணத்தை முடித்துக்கொண்டு தான்சானியா நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டு வளர்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றார். இந்தியாவில் அப்போலா மருத்துவமனைகளில் தான்சானியா நாட்டு டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கும் பயிற்சி அளிக்கவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தான்சானியா அதிபர் ஜகாயா மிரிஷோ கிக்வெதே மகிழ்ச்சியுடன் கூறினார். தான்சானியா தலைநகர் தர்-இஸ்-சலாம் விமான நிலையத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சிறப்பான முறையில் அதிபர் ஜகாயா வழியனுப்பி வைத்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கொடுக்க முழு ஆதரவு கொடுக்கப்படும் என்றும் ஜகாயா கூறினார். தீவிரவாதமும் கடல் கொள்ளையும் ஒரு சவாலாக இருக்கிறது. இதை ஒழிக்க இந்தியாவும் தான்சானியாவும் சேர்ந்து போரிடும். சிறுதொழில், நடுத்தர தொழில்களை தொடங்கவும் இருநாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும் ஜகாயம் மேலும் கூறினார். இரண்டு நாடுகள் பயணத்தையும் முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர் மன்மோகன் சிங்கை வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்