முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி திமுக துணை செயலாளர் குடமுருட்டி சேகர் கைது

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஜூன்.1 - திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளரும் முன்னாள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அறங்காவலருமான குடமுருட்டி என்பவரை திருச்சி மாநகர போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர்.  அவர் மீது கஞ்சா மற்றும் மது பாட்டில்களை கடத்தியதாகவும், திருச்சி கோட்டை சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியதாகவும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த சம்பவம் பற்றி திருச்சி மாநகர போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி கோட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு திருச்சி-கரூர் பைபாஸ் ரோட்டில் கார் மூலம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போலி மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் திருச்சி கோட்டை இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன், சப்-இஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீஸ் படையினர் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள குடமுருட்டி செக்போஸ்ட் வழியாக வந்த வாகனங்களை அதிரடி சோதனை நடத்தினார்கள். 

அப்போது அந்த வழியாக திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளரும் கம்பரம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவருமான குடமுருட்டி(45) காரில் வேகமாக வந்தார். செப்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் படையினர் குடமுருட்டி சேகரின் காரையும் நிறுத்தி சோதனையிட முயன்றனர். அப்போது குடமுருட்டி சேகர் எனது காரை எதற்காக சோதனையிடுகிறீர்கள் என்று கேட்டு போலீசாருடன் தகராறு செய்தாராம்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் யார் காராக இருந்தாலும் சோதனை நடத்த வேண்டும். அது எங்களது கடமை என்று கூறி குடமுருட்டி சேகரின் கார் கதவையும், பின்புறமுள்ள டிக்கியையும் திறந்து சோதனையிட்டனர். காருக்குள் போலி மதுபாட்டில்களும், சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களும் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த குடமுருட்டி சேகர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை குத்த முயன்றதாக கூறப்படுகிறது. அந்த கத்திக்குத்தை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறனின் கைகிழிந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் மயக்கம் அடைந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஊராட்சி தலைவர் குடமுருட்டி சேகர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். உடனே படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் குடமுருட்டி சேகரை திருச்சி மாநகர் முழுவதும் வலைவீசி தேடினார்கள். இதற்கிடையே போலீசாரிடமிருந்து தப்பிய குடமுருட்டி சேகர் சென்னைக்கு செல்வதற்காக ரயில் ஒன்றில் ஏறி சென்னைக்கு புறப்பட்டார். 

அப்போது இந்த தகவலை அறிந்த போலீசார் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று குடமுருட்டி சேகரை கைது செய்ய காத்திருந்தனர். ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் நின்றது. அப்போது ரயிலுக்குள் பேன்ட், டிசர்ட் போட்டுக்கொண்டு குடமுருட்டி சேகர் பதுங்கி இருந்தார். அவரை சுற்றி வலைத்து போலீசார் கைது செய்து திருச்சி கோட்டை போலீஸ் நிலைத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்தவுடன் அவரை திருச்சி 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் இளங்கோ வீட்டிற்கு போலீசார் இரவில் அழைத்து சென்று ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

கைது செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் குடமுருட்டி சேகர் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் வலது கரமாக கடந்த 5 ஆண்டு செயல்பட்டு வந்தார். கடந்த 1சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் என்பவர் எரித்து கொள்ளப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் குடமுருட்டி சேகரையும் அவருடைய தம்பி திமுக இளைஞரணி பிரமுகர் ஆறுமுகம் என்பவரையும் விசாரித்து வந்தனர். 

குடமுருட்டி சேகர் மீது திருச்சி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலுக்காக திருச்சியில் இருந்தி புறப்பட்டபோது கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் என்பவரின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவை சந்தித்து தனது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அதை வாங்கிப்படித்த முதல்வர் ஜெயலலிதா துரைராஜ் வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகளை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவல் துறையினர் முறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்திருந்தார். 

இந்த நிலையில் திமுக பிரமுகர் குடமுருட்டி சேகரை போலீசார் கைது செய்திருப்பது திருச்சி மாவட்ட திமுகவினரை கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. 

அடுத்தடுத்து மேலும் சில திருச்சி திமுக பிரமுகர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்