முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடதுசாரிகள் கட்சி சார்பில் ஊழல் எதிர்ப்பு இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுச்சேரி, ஜூன்.27 - அடுத்தமாதம் இந்தியா முழுவதும் இடதுசாரிகள் கட்சி சார்பில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்படும் என்று டி.ராஜா எம்.பி.கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஒப்புதலுடன் எண்ணை நிறுவனங்கள் டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தி உள்ளது. இது மக்கள் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.  இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 2 வருடத்தில் 9 முறை பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்றியது. இது 10-வது முறையாகும். இந்தியாவில் உள்ள எண்ணை நிறுவனங்கள் நஷ்ட ஈடு குறித்து வெளிப்படையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 

உள்நாட்டில் எண்ணை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு உரிய அரசியல் தீர்வு காணப்படவில்லை. ராஜபக்சே செய்தது போர் குற்றம் என்று ஜ.நா. குழுவே கூறியுள்ளது. எனவே இலங்கை அரசு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். 

தமிழகத்தில் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து தீர்மானம் கொண்டுவந்துள்ளதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. வருகிற 8-ந் தேதி இலங்கை தமிழர்களுக்காக ஒருமைப்பாட்டு மக்கள் இயக்கம் நடத்தப்படும். இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மீனவர்களின் வாழ்க்கை தரத்தை காக்க கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து மறு ஆய்வு நடத்த வேண்டும். 

மத்திய அரசு ஊழலை தடுக்க லோக்பால் மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரவுள்ளது. இதில் பிரதமர், முதல்வர் ஆகியோரை கொண்டு வருவதில் தவறு ஏதும் இல்லை. வருகிற மாதம் 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இடதுசாரிகள்  ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை இந்தியா முழுவதும் நடத்த உள்ளனர். தேர்தல் துறையில் சீர் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்