முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் டே - மாநில கல்லூரி மாணவர்கள்-போலீஸ் மோதல்

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.28 - சென்னையில் பஸ் டே கொண்டாடுவதில் மீண்டும் போலீசார்- மாணவர் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் கல் வீசி தாக்கியதில் 6 போலீசார் காயம் அடைந்தனர். இதுபற்றி விபரம் வருமாறு:- சென்னையில் சில தினங்களாக மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதால் பொதுமக்களுக்கு ஏராளமான இடையூறுகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக பல புகார்கள் போலீசாருக்கு வந்தது. இந்த விவகாரம் பற்றி ஐகோர்ட் போலீசாரை விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையே சென்னையில் கடந்த வாரம் பஸ் டே கொண்டாட்டத்தையொட்டி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல், கல்வீச்சு, தடியடி நடைபெற்றது. இதில் 300 மாணவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனிடையே சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் பஸ் டே கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.  இதனிடையே நேற்று மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்னை கடற்கரை சாலையில் வந்த பிபி19, 2ஏ, 21ஜி என்ற எண்ணுள்ள 3 மாநகர பேருந்துகளை சிறை பிடித்து மாநில கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு செல்ல முயன்றனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கண்ணகி சிலை அருகே முதலமைச்சர் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்தனர். இதற்குள் பிபி19 எண்ணுள்ள பஸ்சை மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு சென்று விட்டனர். கல்லூரி கதவையும் மூடிவிட்டு பட்டாசுகள் வெடித்து பஸ் டே கொண்டாடினர். இதை பார்த்த போலீசார் சிறை பிடிக்கப்பட்ட பஸ்சை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

இதனிடையே மாணவர் தரப்பிலிருந்து கற்கள், பீர் பாட்டில்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முதலமைச்சர் பாதுகாப்பிற்காக சாலையில் நின்றிருந்த பெண் காவலர்கள் சம்சும்மா, சாலினி, பூங்காவனம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் வெங்கட்ராமன், பாண்டியன், திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

சம்பவ இடத்திற்கு திருவல்லிக்கேணி துணை ஆணையர் மயில்வாகனன், உதவி ஆணையர் தமிழ்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக கடற்கரை சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் பெரும் பரபரப்பு காணப்பட்டது. சாலையில் கற்களும், பாட்டில்களும் சிதறி அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்