முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீலா - கல்மாடி மீது வழக்கு பதிவு செய்ய பாரதிய ஜனதா கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.8 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய தணிக்கை குழுவால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் மற்றும் போட்டியின் அமைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி ஆகியோர் மீது லஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு பாரதிய ஜனதா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் காமன்வெல்த் நாடுகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்த போட்டி பற்றி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதில் பல முறைகேடுகள் நடப்பதாக அடுத்தடுத்த செய்திகள் வெளியாகின. இறுதியில் அந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதும் தெரியவந்தது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கல்மாடி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் மத்திய கணக்கு தணிக்கை குழு 3 தினங்களுக்கு முன் ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் போட்டிக்கான ஏற்பாடுகளில் பல்லாயிரம் கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் இதற்கு போட்டி அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆகியோரே பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் தனது முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., இடதுசாரிகள் போன்ற கட்சிகள் வலியுறுத்தின. மத்திய கணக்கு தணிக்கைக்குழு இடித்துரைத்தும்கூட நாங்கள் தவறு செய்யவில்லை என்று டெல்லி மாநில அரசு கூறியுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது என்று நிதீன்கட்காரி கூறினார். ஆனால் ஷீலா தீட்ஷித் பதவி விலக தேவையில்லை என்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த விஷயத்தில் ஷீலா தீட்ஷித்தின் பின்னால் ஒட்டுமொத்த காங்கிரசே இருக்கிறது. ஷீலா தீட்ஷித்தும் அந்த அறிக்கையை நான் பார்க்கவே இல்லை. பார்த்த பிறகு சொல்கிறேன் என்கிறார். இதற்கிடையில் டெல்லியில் நேற்று பா.ஜ. க. மூத்த தலைவர் அத்வானி இல்லத்தில் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உட்பட பலர் கலந்துகொண்டனர். இன்று கூடும் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சினையை எப்படி எல்லாம் எழுப்புவது என்று இந்த தலைவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று கூடி ஷீலா தீட்ஷித் விவகாரம் பற்றி விவாதிக்கிறார்கள். இந்நிலையில் ஷீலா தீட்ஷித், சுரேஷ் கல்மாடி ஆகியோர் மீது லஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி மத்திய புலனாய்வுத்துறைக்கு பாரதிய ஜனதா கட்சி கடிதம் ஒன்று எழுதியிருக்கிறதாம். இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்றம் இன்று மீண்டும் தொடங்குகிறது. அப்போது ஷீலா தீட்ஷித் விவகாரத்தால் சபையில் கடும் கொந்தளிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்