முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாகூறும் காரணங்கள் அறிவியல் பூர்வமாக சாத்தியமே இல்லை-:உம்மன்சாண்டி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. - 8 - முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்காக கேரளா கூறும் காரணங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக சாத்தியமே இல்லை. ஆகவே அது குறித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் குழுவிடம் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.  தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி அறிக்கையை தயாரிப்பதற்காக வரும் 24, 25 ம் தேதிகளில் நீதிபதி ஆனந்த் குழு டெல்லியில் கூடவுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், புதிய அணை கட்டும் திட்டத்தை கடந்த 1979 ம் ஆண்டிலேயே மத்திய நீர்வள ஆணையம் நிராகரித்து விட்டது. அதன் பிறகு மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரையின்படி கேரளத்தின் ஒப்புதலுடனும் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு 1994 ம் ஆண்டில் நிறைவடைந்துள்ளன. கேரளத்தின் எதிர்ப்பால் பேபி அணை பலப்படுத்தும் பணிகள் நடைபெறவில்லை. 

முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்புகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் புதிய அணை போல் அது பலமாக உள்ளது. அண்மையில் அணையை நேரில் ஆய்வு செய்த நிபுணர் குழுவினரும் இதை தெரிவித்தனர். புதிய அணை கட்டும் திட்டம் 116 ஆண்டு காலமாக முல்லைப் பெரியாறு அணையை பராமரித்து வரும் தமிழகத்தின் உரிமையை பறிப்பதாக உள்ளது. பழைய அணையே பலமாக உள்ளதால் புதிய அணை தேவையற்றது. புதிய அணைக்கான நிர்வாகம் என்ற கேள்வியே எழவில்லை. இந்நிலையில் புதிய அணையின் உரிமை கேரளத்திடம் இருக்க வேண்டும் என்ற வாதம் தமிழகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.  தற்போதைய அணை பலமாக உள்ள போதிலும் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளம் வற்புறுத்தி வருகிறது. அணையின் உரிமையை தன்னிடம் எடுத்து கொள்ள வேண்டும் என்பதே கேரளத்தின் நோக்கம். இதற்காகத்தான் அணை உடையப் போகிறது என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறது. புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு தெரிவிக்கும் காரணங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக சாத்தியமற்றவை.. அது குறித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தனது மனுவில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.  கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், புதிய அணையின் உரிமை பராமரிப்பு ஆகியவை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அணையின் நீர் ஒழுங்குமுறை இரு மாநில பொறியாளர்களின் கூட்டுக் குழு கட்டுப்பாட்டில் இருக்கும். புதிய அணையின் நீர் ஒழுங்குமுறை குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் இணைத்து சுயேச்சையான குழு உருவாக்கப்பட்டாலும் கேரள அரசுக்கு சம்மதம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புதிய அணை குறித்து தமிழகமும், கேரளமும் இணைந்து கூட்டு உரிமைக்கு தயாராக உள்ளதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதற்கு கேரள காங்கிரசை சேர்ந்த சில தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கேரள சட்டசபையின் எதிர்க் கட்சி தலைவரான அச்சுதானந்தனும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையடுத்து புதிய அணையின் உரிமை கேரள அரசிடம் மட்டும் இருக்கும் என்று உம்மன் சாண்டி கூறினார். நீர் ஒழுங்குமுறை மட்டுமே இரு மாநில அரசுகளின் கூட்டு குழுவிடம் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். ஏ.எஸ். ஆனந்த் குழுவிடம் கேரள அரசு தாக்கல் செய்த மனுவிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்