முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கும் - ராகுலுக்கும் என்னை கண்டால் அலர்ஜி: ஹசாரே

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

பிஜ்னூர் - பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கும் என்னை கண்டால் அலர்ஜி என சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரே கடந்த வாரம் இரண்டு நாள் போராட்டம் நடத்தினார். இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டும் அல்லாது, பாஜ கூட்டணியில் உள்ள அகாலிதளம் மற்றும் சிவசேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த மசோதா குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டி ஒன்றை பாஜ தலைவர் அமீத்ஷா நியமித்துள்ளார். இந்த குழு பல்வேறு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் மத்திய அரசின் மசோதாவுக்கு எதிராக புதிய போராட்டங்கள் நடத்த அன்னா ஹசாரேவும் திட்டமிட்டு வருகிறார். இது தொடர்பாக அவரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் விவசாய தலைவர்கள் சந்திப்புக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஹசாரே,

எனது ஆலோசனைகளை பிரதமர் மோடி ஏற்க மாட்டார். மோடியும், ராகுலும் தொழிலதிபர்களுக்கு ஆதரவானவர்கள் என மக்களவை தேர்தல் சமயத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது முதல் இருவருக்கும் என்னை கண்டால் அலர்ஜி. மத்திய அரசு தொழிலதிபர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. பலத்தை பிரயோகித்து விவசாயிகளின் நிலத்தை பறிக்க பார்க்கிறது. பழைய சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து